: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நேற்று தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை கொட்டியதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சங்கரன்கோவிலில் சங்கரநாராயண சுவாமி கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்.15-ம் தேதி தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நேற்று மழை கொட்டியது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் நேற்று மதியம் வரை தண்ணீர் விழவில்லை. மலைப்பகுதியில் நேற்று மாலையில் பெய்த பலத்த மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும், மாலை 6 மணிக்குப் பிறகு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. சங்கரன்கோவிலில் நேற்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை பெய்த மழையால், தாழ்வான பகுதிகளிலும், சாலை யோரங்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்தது. அங்குள்ள சங்கர நாராயண சுவாமி கோயிலுக்குள் தண்ணீர் தேங்கியது.

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலுக்குள் புகுந்த மழை நீர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மதியத்துக்கு பிறகு இரண்டரை மணி நேரத்துக்கு மேல்கனமழை பெய்தது. இதனால், வெகுநாட்களுக்குப் பின்னர் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு 1,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தது.
பாலமோர் மழைப்பகுதியில் பெய்த கனமழையால் திற்பரப்பு அருவியில் நேற்று மாலை திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பழநி பகுதிகளில் நேற்று மாலை 6.30 மணிக்கு மேல் இடியுடன் தொடங்கிய பலத்த மழை, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இந்த மழை காரணமாக பழநி மலைக்கோயிலுக்குச் செல்லும் படிப்பாதையில் மழைநீர் அருவி போல் கொட்டியது.
கடந்த செப்.30-ம் தேதியுடன் நிறைவடைந்த தென்மேற்குப் பருவமழை காலத்தில் 21 சதவீதம் மழை குறைவாகக் கிடைத்துள்ளது. தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் கடந்த 2012-ல் 23 சதவீதம், 2016-ல் 20 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை விலகியதைத் தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா, கேரளம், மாஹே ஆகிய பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது.
தெற்கு கடலோர தமிழகப் பகுதிகளின் மேல் சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. அதில் தொடங்கி மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வழியாக ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
மிகக் கனமழை வாய்ப்பு
இதன் காரணமாக தமிழகத்தில் அக்.16-ம் தேதி (இன்று) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன்கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.
ஈரோடு, திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, கரூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், தருமபுரி, கிருஷ்கிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, கடலூர், திருவள்ளூர் மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
17-ம் தேதி (நாளை) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ராமநாதபுரம், திருச்சி, திருநெல்வேலி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை குறைவு
வடகிழக்குப் பருவமழை தொடர்பாக செய்தியாளர்களிடம் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர். துரை நேற்று கூறியதாவது: நாடு முழுவதிலும் இருந்து தென்மேற்குப் பருவமழை 15-ம் தேதி (நேற்று) விலகியுள்ளது.