இந்தியாவின் மதுரையைச் சேர்ந்த சமூக வலைத்தள உள்ளடக்க உருவாக்குநரான வீரமணி, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தனது பின்தொடர்பவர்கள் தனக்கு இனிப்புப் பெட்டிகளை அனுப்புவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் தனது வீட்டு முகவரியையும் தொலைபேசி இலக்கத்தையும் இணையத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
எனினும், இது ஒரு விசித்திரமான மற்றும் கடுமையான தொல்லைக்கு வழிவகுத்ததுடன், இறுதியில் அவர் தனது வீட்டைவிட்டே வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
செல்வாக்கு செலுத்துபவரின் தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்திய குறும்புக்காரர்கள் , பிரதான இ-காமர்ஸ் தளங்கள் ஊடாக பணம் செலுத்திப் பெறும் முறையின் கீழ் அதிகளவான கணக்கில் போலி ஆர்டர்களை வழங்கியுள்ளனர்.
சில நாட்களுக்குள் குளிர்சாதனப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் தொலைக்காட்சிகள் போன்ற விலையுயர்ந்த பொருட்களுடன் டெலிவரி வாகனங்கள் அவரது வீட்டிற்கு வரத் தொடங்கின.
ஒரு சந்தர்ப்பத்தில், 169,000 இந்திய ரூபா பெறுமதியான தொலைக்காட்சிப் பெட்டியுடன் கூரியர் ஊழியர்கள் வந்து பணம் கோரியுள்ளனர்.
நாள் முழுவதும் உணவு டெலிவரிகள் வந்து குவிந்ததோடு, கனரக தொழிற்துறை இயந்திரங்கள் மற்றும் மில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள இராணுவத் தளவாடங்கள் அவரது முகவரிக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் ஸ்கிரீன்ஷாட்கள் பகிரப்பட்டன.
நாளுக்கு நாள் அதிகரித்த இந்தத் தொல்லைகளால் டெலிவரி ஊழியர்களைச் சமாளிக்க முடியாமல் திணறிய வீரமணி, தான் எந்த ஆர்டர்களையும் செய்யவில்லை எனத் தொடர்ச்சியாக விளக்கமளிக்க வேண்டியதாயிற்று. இறுதியில், நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, இதற்குப் பொறுப்பானவர்கள் இதனை நிறுத்துமாறு கோரி அவர் இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிகரமான வீடியோ ஒன்றை வெளியிட்டார்.