அதிமுக என்ற போர்வையின் மூலம் மீண்டும் தமிழகத்தினுள் நுழைய முயற்சிக்கிறது பாஜக என, ஆவடியில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஆவடி சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சர் சா.மு.நாசர் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: திமுக இளைஞரணி தொடங்கப்பட்ட காலத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்றத் துணையாக இருந்தவர் சா.மு.நாசர்.
திமுக முதன் முதலாக வெற்றி பெற்ற 1967 தேர்தலின் போது, பள்ளி மாணவனாக வீடு வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தவர் சா.மு.நாசர். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த சா.மு.நாசருக்கு, தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
கட்சி பணி மட்டுமல்லாமல், 25 ஆண்டு காலம் பல்வேறு பொறுப்புகளில் இருந்து மக்கள் பணியாற்றி வரும் சா.மு.நாசர், ஆவடி நகராட்சி தலைவராக இருந்து, ஆவடியின் வளர்ச்சிக்கு உழைத்தவர். அவர் போட்ட அடித்தளத்தில்தான் ஆவடி தொகுதியையே வளரச்ச்சிப் பாதையில் கொண்டு சென்றுள்ளார்.
கடந்த 5 ஆண்டில், சா.மு. நாசர் முயற்சியால், ஆவடி மாநகராட்சியில் ரூ.13 கோடி மதிப்பில் பல்வேறு சாலைகள், ரூ.31 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால்வாய்கள், 19 அரசு துணை சுகாதார நிலையங்கள், 81 ஆயிரம் பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சென்னை அண்ணாநகர் முதல், நெமிலிச்சேரி வரை மெட்ரோ ரயில் திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. ஆவடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
கடந்த தேர்தலில் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சா.மு.நாசரை, இந்த தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யவேண்டும்.




