அமைச்சர் பொன்முடியிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள்

செம்மண் குவாரி மூலம் சட்டவிரோதமாக பணம் ஈட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் சென்னையில் அமலாக்கத்துறையினர் கடந்த 2 நாட்களாக சுமார் 27 மணி நேரம் விசாரணை செய்தனர். நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக பொன்முடியும், கவுதம சிகாமணியும் நேற்று மாலை 3.52 மணியளவில் ஆஜரானார்கள்.

அவர்களை மூன்றாவது தளத்துக்கு அழைத்துச் சென்று தனித்தனியாக அறைகளில் வைத்து விசாரித்தனர். சுமார் ஒன்றரை மணி நேர விசாரணைக்கு பின்னர் அமைச்சர் பொன்முடி அங்கிருந்த 5-வது தளத்தில் உள்ள விசாரணை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரிடம் செம்மண் குவாரி மூலம் சட்ட விரோதமாக பணம் ஈட்டியது, அந்த பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்தது ஆகியவற்றை பற்றி கேள்விகளை எழுப்பி பதில் பெற்றதாகத் தெரிகிறது.

இருவரிடமும் தலா 100 கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டதாக தெரிகிறது. சுமார் 6 மணி நேர விசாரணைக்கு பின்னர் இரவு 10.10 மணியளவில் பொன்முடியும், அவரது மகனும் அமலாக்கத்துறை அலுவலகத்தை விட்டு வெளியே வந்தனர்.

அவர்களிடம் தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு அழைப்பாணை எதுவும் வழங்கப்படவில்லை என கூறப்பட்டது.