“அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது” – ஜெகன் மோகன் மீதான தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம்

ஆந்திர முதலவ்ர் ஜெகன் மோகன் ரெட்டி மீதான கல்வீச்சு தாக்குதலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திர முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி இன்று (ஏப்.13) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த அவர் மீது மர்ம நபர் ஒருவர் தூரத்திலிருந்து கல்லை வீசி தாக்கினார். அந்த கல் ஜெகன் மோகனின் புருவத்துக்கு சற்று மேல பட்டதில், அவருக்கு சிறிய ரத்தக் காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்த அதிகாரிகள் முதல்வர் ஜெகன் மோகனுக்கு உடனடியாக முதலுதவி செய்தனர். ஜெகன் மோகன் ரெட்டி நெற்றியில் காயத்துடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த சம்பவத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீதான கல்வீச்சு சம்பவத்துக்கு கண்டனங்கள். அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது. ஜனநாயக நடவடிக்கைகளில் ஈடுபடும்போது நாகரீகத்தையும் பரஸ்பர மரியாதையையும் நிலைநாட்டுவோம். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.