“நாம் ஆனந்தமான, அனைவரையும் இணைத்து கொள்ளும் மனிதர்களாக நம்மை உருவாக்கி கொள்வது, அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை உருவாக்கும் நம்முடைய முயற்சியில் ஒரு முக்கிய படியாகும்” என ஈஷாவில் நடைபெற்ற G20 – S20 மாநாட்டில் சத்குரு கூறினார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் G-20 சந்திப்புகளின் ஒரு அங்கமாக, கோவை ஈஷா யோகா மையத்தில் S-20 என்ற பெயரில் 100-க்கு மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் பங்கேற்ற அறிவியல் மாநாடு நேற்றும், இன்றும் நடைபெற்றது. இதில் 20 நாடுகளில் இருந்து விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், வல்லுநர்கள் மற்றும் சட்டம் இயற்றும் திறன் படைத்தவர்கள் என பல தரப்பினர் கலந்து கொண்டனர்.
அவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடும் சிறப்பு அமர்வும் நடைபெற்றது. இந்த அமர்வில் நல்வாழ்விற்கான உள்நிலை தொழில்நுட்பங்களை சத்குரு பகிர்ந்து கொண்டார். 2 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் ‘தி ராயல் சொசைட்டி – இங்கிலாந்து’, ‘தேசிய அறிவியல் அகாடமி – அமெரிக்கா’, ‘சர்வதேச அறிவியல் கவுன்சில் – பிரான்ஸ், ‘ஐரோப்பிய அணுசக்தி ஆராய்ச்சி நிலையம் – ஸ்விட்சர்லாந்து’, ‘இந்திய தேசிய அறிவியல் அகாடமி’ உள்ளிட்ட உலகின் மிக முக்கியமான அறிவியல் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பசுமையான எதிர்காலத்திற்கான தூய எரிசக்தி, முழுமையான ஆரோக்கியம், சமூகம் மற்றும் கலாச்சாரத்துடன் அறிவியல் இணைப்பது ஆகிய மூன்று தலைப்புகளில் கலந்துரையாடல்கள் நிகழ்த்தினர்.
இக்கூட்டத்தில் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் பங்கேற்றார். அவர் ஆன்மீக மையத்தில் அறிவியல் மாநாடு நடத்துவது பற்றிய தனது கருத்தை கூறும் போது, “சுவாரஸ்மற்ற பழைய முறையிலான வரட்டுதனமான அறிவியலுக்கு ஒரு குறிப்பிட்ட எல்லை இருக்கிறது என்பதை தற்போது பலர் உணர்ந்து கொண்டுள்ளனர். பொதுவாக, வாழ்க்கையை அறிவியலை அணுகுவது போன்ற குறுகிய கண்ணோட்டத்துடன் புரிந்து கொள்ள முடியாது. வாழ்க்கையை புரிந்துகொள்ள அதிக விசாலமான பார்வை தேவை. அத்தகைய பார்வையை கொண்டுள்ள ஈஷா யோக மையத்தில் இந்த மாநாடு நடத்தப்படுவது சிறப்பானது” என கூறினார்.
சர்வதேச பிரதிநிதிகள் ஈஷாவில் தங்கியிருந்த அனுபவங்கள் குறித்து S-20 மாநாட்டின் தலைவர் அசுதோஷ் சர்மா கூறுகையில், “நியூயார்க்கில் இருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டலிலோ அல்லது மும்பை, டில்லியில் இருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டலிலோ ஒரு மாநாட்டை நடத்தினால் அதில் பெரிய வித்தியாசம் இருக்காது. ஆனால், ஈஷா யோக மையத்தை போன்ற ஒரு இடத்தில் S-20 மாநாட்டை நடத்துவது இந்தியா குறித்த புதிய பார்வையையும், அனுபவத்தையும் அளிக்கிறது” என S-20 மாநாட்டில் பங்கேற்ற சர்வதேச பிரதிநிதி ஒருவர் தன்னிடம் பகிர்ந்து கொண்டதாக கூறினார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் நாகராஜ் நாயுடு கூறுகையில், “அறிவியல் மற்றும் ஆன்மீகம் ஆகிய இரண்டின் நோக்கமும் நம்முள் இருக்கும் கேள்விகளுக்கு விடைகளை கண்டறிவது தான். அறிவியல் உலகத்தை புரிந்து கொள்வதை நோக்கமாகவும். ஆன்மீகம் உண்மையை புரிந்து கொள்வதை நோக்கமாகவும் கொண்டுள்ளது. இரண்டிற்குமான பயன்பாடுகளும், நடைமுறைகளும் கொஞ்சம் வேறுபட்டு இருந்தாலும், இரண்டும் ஒரு விதத்தில் ஒரே மாதிரியான வழிமுறையை பின்பற்றுகின்றன.
அறிவியல் மற்றும் ஆன்மீகம் ஆகிய இரண்டும் மனித குலத்தை மேம்படுத்தும் பணியை தான் செய்கின்றன.” என கூறினார். மாநாட்டின் ஒரு பகுதியாக, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பாலசுப்பிரமணியம் ‘யோக அறிவியல்’ என்ற தலைப்பில் ஒரு அமர்வை நடத்தினர். அதில் ஈஷாவில் கற்றுக்கொடுக்கப்படும், ஈஷா க்ரியா, சூன்யா, சம்யமா போன்ற தியானங்களை செய்வதால் ஏற்படும் பலன்கள் குறித்த அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் பற்றி பேசினார். முன்னதாக, மாநாட்டிற்கு வருகை தந்த சர்வதேச பிரதிநிதிகளை ஈஷா யோக மையத்தின் தன்னார்வலர்கள் பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் களரி பயட்டு மற்றும் பரத நாட்டிய நிகழ்ச்சி சர்வதேச பிரதிநிதிகளை வெகுவாக கவர்ந்தது.