ஈரான் – அமெரிக்க போரை நிறுத்த பிரிக்ஸ் நாடுகளுடன் சேர்ந்து அமைதிக்கான முயற்சியை இந்திய அரசு எடுக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் விசிக கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தும் போரை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்துகொண்டு போரை உடனடியாக நிறுத்த வேண்டும், யுத்தம் வேண்டாம் அமைதி வேண்டும், இந்திய அரசு தலையிட்டு போரை நிறுத்த வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பெ.சண்முகம், மு.வீரபாண்டியன், திருமாவளவன் ஆகியோர் கூறியதாவது: அமெரிக்காவின் யுத்த வெறியாலும், இஸ்ரேலின் இனவெறியாலும் மத்திய கிழக்கு பற்றி எரிகிறது.
லட்சக்கணக்கான அப்பாவி மக்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் அலறல் சத்தம் உலகத்தின் மனசாட்சியை உலுக்கி எடுக்கிறது. போர் நியதிகள், ஐநா விதிகளை மீறி மனிதகுலத்தின் எதிரி என்பதை அமெரிக்க ஏகாதிபத்தியம் மீண்டும் நிருபித்துள்ளது.
இந்த விவகாரத்தில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா பார்வையாளராக இருக்கிறது. லட்சக்கணக்கான இந்தியர்கள், தமிழர்கள் வாழ்வாதரத்துக்காக அங்கே சென்று பணிபுரிகின்றனர்.
அவர்களை பத்திரமாக மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அணி சேரா நாடுகளின் முன்னணி நாடு என்ற முறையில் இந்திய அரசு, ரஷ்யா, சீனா போன்ற பிரிக்ஸ் நாடுகளுடன் இணைந்து உடனடியாக அமைதிக்கான முயற்சியை எடுக்க வேண்டும்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற 13 மாதங்களில் 7 நாடுகள் மீது குண்டுகள் வீசி அப்பாவி மக்களை கொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். போர் தொடர்ந்து நடைபெற்றால் கச்சா எண்ணெய் விலை உயரும், அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயரும்.
இந்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு அமெரிக்கா, இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அமைச்சரவையை கூட்டி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இந்தியாவில் உள்ள ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போர் நிறுத்ததுக்கு குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.





