“உதயநிதிக்கும் விஜய்க்கும் இடையில் தான் இனி போட்டி!”

தமிழக அரசியல் களத்தில், தனது சொல்வீச்சால் கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் வசீகரித்தவர் திராவிட இயக்கப் பேச்சாளரான நாஞ்சில் சம்பத். கடந்த 40 ஆண்டுகளாக தேர்தல் களத்தில் அனல் கக்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்த அனுபவம் இருந்தாலும் இதுவரை தனக்காக அவர் ஒருபோதும் பிரச்சாரம் செய்ததில்லை. தமிழக அரசியலின் சமீபத்திய நிகழ்வுகள், எதிர்கால கணிப்புகள் குறித்து ‘இந்து தமிழ் திசை’க்காக அவரிடம் பேசியதிலிருந்து…

வரும் 2026 பேரவைத் தேர்தல் களம் எதன் அடிப்படையில் கட்டமைக்கப்படும்… எத்தனை அணிகள் போட்டியிடும் என கருதுகிறீர்கள்?

தமிழகம் தாண்டி, தேசிய அளவிலும் திமுகவின் தேவை அதிகரித்துள்ளது. மதச்சார்பற்ற அணிகளை ஒருங்கிணைக்க வேண்டிய கடமையும், மக்கள் நலன் சார்ந்து ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பும் இண்டியா கூட்டணிக்கு இருக்கிறது. அதற்கு முகமாக ராகுல் காந்தியும், முகவரியாக ஸ்டாலினும் இருக்கின்றனர். எனவே, பாஜக எதிர்ப்பு என்ற அடிப்படையில்தான் 2026 தமிழக தேர்தல் களம் கட்டமைக்கப்படும். இதில், திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி, பாஜக – அதிமுக கூட்டணி, தம்பி விஜய் தலைமையிலான தவெக அணி என மூன்று அணிகள் களத்தில் இருக்கும்.

இந்த வரிசையில், 8.5 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சியை விட்டுவிட்டீர்களே..?

அக்கட்சி நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்துவிட்டனர். தேர்தல் வரை நாதக கட்சி தாங்குமா என தெரியவில்லை. அதோடு, தம்பி விஜய் அரசியல் கட்சி தொடங்கிய போதே நாதகவுக்கு மாரடைப்பு வந்துவிட்டது. ஆகவே, களங்கப்பட்டு நிற்கிற, மிக மலிவான, தரம் தாழ்ந்த அரசியலை செய்கிற, தன்னை நம்பி வந்தவர்களைக்கூட தக்கவைக்காத சீமான், தமிழக அரசியலுக்கு இனி தேவைப்பட மாட்டார். இம்முறை அக்கட்சிக்கு 1 சதவீத வாக்குகள்தான் கிடைக்கும்.

3 அணிகள் போட்டியிடுமானால், திமுகவுக்கு எதிரான முதல் போட்டியாளராக யார் இருப்பார்கள்?

தவெகவும், அதன் தலைவர் விஜய்யும்தான் முதல் போட்டியாளர்களாக இருப்பார்கள். லட்சக்கணக்கான இளைஞர்களை வசீகரித்து, விஜய் ஒரு புதிய சக்தியாக அவதாரம் எடுத்துள்ளார். விஜய்க்கு என ஒரு ‘மாஸ்’ இருப்பது அவரது பிரச்சாரப் பயணத்தில் தெரிகிறது. ஆனால், இபிஎஸ் பிரச்சாரம் செல்லும் இடங்களில் எல்லாம் தோல்வி கண்டு வருகிறார். எந்த பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்; எதைப் பேச வேண்டும் என்று ஒரு தெளிவுப் பார்வை இபிஎஸ்ஸிடம் இல்லை.

விஜய்யைவிட பிரபலமான சிவாஜி கணேசன், சிரஞ்சீவி, கமல்ஹாசன் ஆகியோருக்கும் பெரும் கூட்டம் கூடியது. ஆனால், தேர்தலில் அவர்களால் வெல்ல முடியவில்லையே?

தமிழக அரசியலில் ஒரு மாற்று அரசியலுக்கான தேவை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வைகோ, மூப்பனார், விஜயகாந்த் மற்றும் மக்கள் நலக் கூட்டணி என பல வடிவங்களில் இந்த தேவையை பூர்த்தி செய்ய முயற்சி நடந்தது. ஆனால், அதில் வெற்றி கிடைக்கவில்லை. எனவே, மாற்று அரசியலுக்கான இடத்தை நிரப்பும் தலைவராக விஜய் இருப்பார். விஜய் நடிகர் திலகம் அல்ல; மக்கள் திலகம். அவர் எம்ஜிஆரையும், அண்ணாவையும்தான் எடுத்துக் கொண்டு களத்துக்கு வருகிறார். எனவே, அவரை சிவாஜியுடன் ஒப்பிடக் கூடாது.

விஜய் தனது பிரச்சாரத்தில் முதல்வரை ‘சிஎம் அங்கிள்’ என முதிர்ச்சியற்ற முறையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டதே..?

சினிமா மொழியில் விஜய் பேசுகிறார். அதுதான் இளைஞர்களை ஈர்க்கிறது. எனவே, இதற்கு ஒரு தவறான அர்த்தம் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், இது குறித்த விமர்சனம் வந்தவுடன், தனது பேச்சை விஜய் மாற்றிக்கொண்டு விட்டார்.

அப்படியானால் இளைஞர்களை ஈர்க்கும் சக்தியை திராவிட இயக்கங்கள் இழந்துவிட்டனவா?

இது எனக்கு மிகுந்த கவலையாக இருக்கிறது. இதுகுறித்து கடிதமாக எழுதி முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்தேன். இதற்கென ஒரு பிரச்சார யுத்தத்தை நடத்தினால் மட்டும் தான் திமுக என்ற நந்தவனத்துக்குள் இளைஞர்களை மீண்டும் கொண்டு வர முடியும்.

திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேற வாய்ப்புள்ளதா?

இது உயர்ந்த நோக்கத்துக்காக அமைக்கப்பட்ட அணி. இதைப் பாழாக்குவதற்கு பலரும் முயற்சிக்கலாம். ஆனால், அதற்கு யாரும் பலியாக மாட்டார்கள். முதல்வர் ஸ்டாலின் சாதுர்யத்துடனும், சாணக்கியத்துடனும் எல்லோரையும் அரவணைத்துச் செல்வார்.

நயினார் நாகேந்திரனின் பிரச்சாரப் பயணத்தால் தமிழக பாஜக வலிமை பெறுமா?

முதல் நாள் சுற்றுப்பயணமே ‘அட்டர் ஃபெயிலியர்’ ஆகிவிட்டது. அவரது பயண தொடக்க நிகழ்வுக்கு வருவதாகச் சொன்ன ஜே.பி. நட்டா மற்றும் ‘இரண்டாவது அம்மா’ ஆகியோர் வரவில்லை. பிரச்சாரத்தில் ஒருங்கிணைப்பு இல்லை. நயினார் நாகேந்திரன் எனது நண்பர் என்றாலும், என்ன பேச வேண்டும் என்பதில் அவரிடமும் தெளிவு இல்லை.

தேர்தலில் நின்று சட்டப்பேரவைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணமே உங்களுக்கு இல்லையா?

இதுவரைக்கும் வரவில்லை. ஒருமுறை, “நீங்கள் இதுவரை தேர்தலில் நின்றதே இல்லையா?” என்று ஜெயலலிதா ஆச்சரியமாக என்னிடம் கேட்டார். “நான் நின்றதும் இல்லை. நிற்கவும் மாட்டேன். இலக்கியம், அரசியல் தளங்களில் ஒப்பீடு இல்லாத இடத்துக்கு வரவேண்டும் என்பதே என் விருப்பம்” என தெரிவித்தேன். கலைஞர், ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட வைகோ கேட்டுக் கொண்ட போதும் மறுத்துவிட்டேன்.

தமிழகத்தின் எதிர்கால அரசியல் களம் ‘விஜய் Vs உதயநிதி’ என்று மாறுமோ?

தமிழ்நாட்டின் அரசியல் களம் அப்படி அமைய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், விஜய்யிடம் இருக்கும் மூலதனம் சினிமா மட்டும்தான். ஆனால், உதயநிதியிடம் திராவிடக் கொள்கை சார்ந்த புரிதல், அரசியல் அனுபவம் உள்ளது என்பதையும் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

சமீபத்திய செய்திகள்