எந்தத் தொகுதியில் போட்டி? – உதயநிதி ஸ்டாலின் பதில்

“கடந்த தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டேன். தற்போது திமுக தலைவர் என்ன முடிவு எடுக்கிறாரோ, அந்த தொகுதியில் போட்டியிடுவேன்” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தேர்தலை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் சந்திப்பை நடத்தி முடித்துள்ளோம். நாளை திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநாடு நடைபெற உள்ளது. திமுக தலைவர் அறிவித்த பின்னர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவோம். மக்களை தொடர்ந்து சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

கடந்த 5 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் முதல்வர் மக்களை சந்தித்து வருகிறார். அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொடர்ந்து களத்தில் தான் இருக்கிறோம். 99 சதவீதம் வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார். பள்ளிகளில் காலை உணவு திட்டம் உட்பட தேர்தல் அறிக்கையில் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம்.

திமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும், மகளிர் உரிமைத் தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி கொடுக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். கடந்த தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டேன். தற்போது திமுக தலைவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அந்த தொகுதியில் போட்டியிடுவேன்” என்றார்.