”ஐயாவிற்கு ஏதாவது ஆனால்..” – அன்புமணியின் பேச்சுக்கு ராமதாஸ் காட்டமான பதில்

விழுப்புரம் மாவட்டம் தைலப்புரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; “ஒரு பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் நானே சேர்ந்தேன்.

12 ஆண்டுக்கு முன் எனக்கு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அந்த ரத்தக்குழாய்கள் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக, மருத்துவர்களிடம் பரிசோதிக்க சொன்னேன்.

அவர்களும் பரிசோதித்து விட்ட நல்ல நிலையில் இருப்பதாக கூறியதால், மறுநாளே நான் வீடு திரும்பி விட்டேன். நான் மருத்துவமனையில் இருந்தபோது அனைத்து அரசியல் கட்சியினரும் நேரிலும், தொலைபேசியிலும் நலம் விசாரித்தனர். ஒரு கட்சி மட்டும்தான் நலம் விசாரிக்கவில்லை.

அது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சி. ஐயாவுக்கு ஏதாவது ஆச்சுனால் தொலைத்து போடுவேன். சும்மா இருக்க மாட்டேன். வேடிக்கை பார்க்க மாட்டேன். ஐயாவை வைத்து நாடகமாடிட்டு இருக்காணுங்க,’ என்று எல்லாம் அன்புமணி பேசினார். ஐயாவை பார்க்க துப்பு இல்லை. படிக்காத மாடு மேய்க்கும் சிறுவன் கூட இப்படிபட்ட சொற்களை பேசியிருக்க மாட்டார்.

அதனால் தான் நிர்வாகக் குழுவில் ’அன்புமணிக்கு தலைமைப்பண்பு இல்லை’ என்றேன். நோய் தொற்றும் அளவுக்கு நான் வியாதியில் இல்லை. இப்பவும் சொல்றேன். ஒரு தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள். அது உனக்கும் நல்லது, உன்னை சுத்தியிருக்கும் அந்தக் கூட்டத்திற்கும் நல்லது. பொறுப்பு மட்டும் தான் கிடைக்கும். எம்எல்ஏ, எம்பி பதவி எல்லாம் கிடைக்காது.” இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகள்