கடந்த காலங்களில் கூட்டணிக் கட்சியினர் செய்த துரோகத்தால் தேர்தலில் தோல்வியடைந்தோம். இந்த முறை அப்படி நடக்கக் கூடாது என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவிலில் புதிய தமிழகம் கட்சி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இளைஞரணித் தலைவர் ஷியாம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கிருஷ்ணசாமி பேசியதாவது: 2026 தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் புதிய தமிழகம் நிச்சயமாக போட்டியிடும். தற்போது நமது சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டபோதும், நமக்கு மட்டுமல்ல யாருக்குமே நன்மை இல்லை.
நாங்கள் வெற்றி பெற்றால் எந்தப் பாகுபாடும் இல்லாமல் பணியாற்றுவோம் என அனைத்துத் தரப்பு மக்களிடமும் எடுத்துச் சொல்ல வேண்டும். எந்தக் கூட்டணியில் சேர்ந்தால் நம்மை வேறுபடுத்திப் பார்க்காமல், சதி, துரோகம் செய்யாமல் வாக்களிப்பார்களோ அவர்களோடு சேருவதுதான் உண்மையான கூட்டணி. ஆனால், இதுவரை நமக்கு வஞ்சகம்தான் நடந்துள்ளது.
கடந்த காலங்களில் கூட்டணிக் கட்சியினர் செய்த துரோகத்தால்தான் புதிய தமிழகம் தேர்தலில் தோல்வியடைந்தது. இந்தமுறை அப்படி நடக்கக் கூடாது. அதனால் கூட்டணி அமைத்த உடன் அக்கட்சியினர் உடன் செல்வது கூடாது. எங்கள் வேட்பாளருக்கு வேலை பார்த்தால்தான் நாங்கள் உங்களுக்கு வேலை செய்வோம் என கூற வேண்டும்.
ஆட்சியில் அதிகாரத்திலும் பங்கு இல்லாமல் உங்களுக்கு வாக்கு கிடையாது என கூற வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூரில் நானோ, ஷியாமோ அல்லது உங்களில் யாரோ போட்டியிடலாம். புதிய தமிழகம் வெற்றி பெற்று கோட்டைக்கு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.





