கடற்படையை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 8-ந்தேதி மீன்பிடிக்க சென்ற 4 விசைப்படகுகள் மற்றும் அவற்றில் இருந்த 30 மீனவர்களை எல்லை தாண்டி சென்று மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதே போல் காரைக்கால் மீனவர்கள் 17 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து ராமேசுவரம் மீன்வளத்துறை டோக்கன் அலுவலகம் அருகே கடந்த 10-ம் தேதி அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இலங்கை கடற்படை பறிமுதல் செய்த மற்றும் சேதம் அடைந்த படகுகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் இலங்கை கடற்படையை கண்டித்தும், மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 11-ம் தேதியில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் காவவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் இன்று 3-வது நாளாகவும் தொடர்ந்து வருகிறது. வேலை நிறுத்தத்தால் 800-க்கும் மேற்பட்ட விசைப்பகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. வேலை நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்