தமிழக அரசியல் கட்சிகள் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள கூட்டணி அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். திமுக கூட்டணியில் ஏற்கெனவே உள்ள கட்சிகள் தற்போதும் இடம் பெற்றிருக்கும் சூழலில், அக்கூட்டணியில் தொகுதி பங்கீட்டுக்கான முதல் கட்டப் பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதுவரை காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிக ளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகின்றன. மறுபுறம் அதிமுக கூட்டணி அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ள போதிலும், எந்தக் கட்சியும் இதுவரை உறுதி செய்யப்பட வில்லை. அதேபோல் பாஜக, இந்திய ஜனநாயக கட்சி, புதியநீதிக் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட் டக் கட்சிகள் அக்கூட்டணியில் இடம் பெறும் என்று கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் சூழலே நிலவுகிறது.
அமமுக, ஓபிஸ் அணியினரும் தொடர் சுற்றுப் பயணத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர், குறிஞ்சிப் பாடி, நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி என சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. அதேபோன்று பாமக, பாஜக, தேமுதிக, தமாக கட்சிகளும் ஆர்வம் காட்டுகின்றன.
வழக்கம் போல் நாம் தமிழர் கட்சி சார்பில் ஒருவர் களமிறங்குவது உறுதி என்ற நிலையில், பிரதான எதிர்க் கட்சியான அதிமுக சார்பில் போட்டியிட யாரும் ஆர்வம் காட்டாததால், அக்கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர். ஆளும் கட்சியான திமுகவில் கடலூர் எம்எல்ஏ மகன் பிரவீன் போட்டியிட விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், கூட்டணிக் கட்சிகளான மதிமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் மு.செந்திலதிபனும், காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவர் கே.எஸ்.அழகிரியும், வழக்கறிஞர் ஏ.எஸ்.சந்திர சேகரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் பாமக சார்பில் அதன் தலைவர் அன்புமணியும், பாஜக சார்பில் வினோத் பி.செல் வம் மற்றும் ஓபிசி பிரிவு தலைவர் சுரேஷ் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். தமாகவும் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் நெடுஞ்செழியனை களமிறக்க விரும்புவதாக தெரிகிறது. பிரதானக் கட்சியான அதிமுகவில் கூட்டணி இறுதியாகாத நிலை யில் அக்கட்சியினர் களமிறங்க போதிய ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.
குறிப்பாக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மகனை களமிறக்க தலைமை கேட்டுக்கொண்ட போதும் தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் சத்யா பன்னீர் செல்வமும் மறுத்து விட்ட நிலையில், பலமானவர்களே தயக்கம் காட்டும் போது மற்றவர்கள் மட்டும் எப்படி துணிந்து களமிறங்குவார்கள் என்கிறது கடலூர் அதிமுக வட்டாரங்கள். எம்.சி.சம்பத் மகனை களமிறக்க தலைமை கேட்டுக்கொண்டது.