“கமல் பேச்சு … புரிஞ்சா எனக்கு சொல்லுங்க…” – வானதி சீனிவாசன் கிண்டல்

‘‘மாநிலங்களவையில் கமல்ஹாசன் பேசியது எனக்குப் புரியவில்லை. ஏற்கெனவே அவர் பேச்சு புரியாததால்தான் கோவை மக்கள் தோற்கடித்தனர்’’ என பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்தார்.

கோவை கணபதி ஓம்சக்தி நகரில் ‘உங்கள் குரல் எங்கள் செயல்’ என்ற அலைபேசி செயலி மூலம் மக்களின் கருத்துகளையும், பிரச்சினைகளையும் அறிந்துகொள்ளும் திட்டம் பாஜக சார்பில் நேற்று தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் முதல்முறையாக இந்த திட்டத்தை தமிழக பாஜக தேர்தல் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தொடங்கி வைத்தார்.

இதில் பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர். இதையடுத்து கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சங்கனூரில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மோடி முகாம் நிகழ்வை இருவரும் தொடங்கி வைத்து நல திட்ட உதவிகளை வழங்கினர்.

பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்களுக்கும், மக்களுக்கும் ஒரு கனவு இருக்கிறது. மக்களுக்கு எதிரான திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவது தான் அந்தக் கனவு. வரும் தேர்தலில் அந்தக் கனவை தமிழ்நாட்டு மக்கள் நிறைவேற்றுவார்கள். நான் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவெடுத்து தலைமை அறிவிக்கும். தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். அதிமுக அரசின் மானிய விலையில் இருசக்கர வாகனத் திட்டம், தாலிக்கு தங்கம், மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு சமூக நலத்திட்டங்களை நிறுத்திவிட்டார்கள்.

மாநிலங்களவையில் கமல்ஹாசன் என்னென்னமோ பேசினார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி கிண்டல் செய்யப்படுவதாக சொல்கின்றனர். கமல் பேச்சு எனக்கு புரியவே இல்லை. அவர் பேச்சு புரிந்தால் எனக்கு சொல்லுங்கள். ஏற்கெனவே கோவையில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிட்டபோது அவர் பேச்சு புரியாததால்தான் மக்கள் அவரைத் தோற்கடித்து இங்கிருந்து அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் எதற்காக நிறுத்தப்பட்டாரோ அந்த முதலாளிகள் அவரை இப்போது டெல்லிக்கு அனுப்பி இருக்கின்றனர். அவர்களுக்காவது கமல் நியாயம் செய்யக் கூடாதா?