கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி. தலா ரூ.50 ஆயிரம் வீதம் 40 குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கினார். அதனை தொடர்ந்து அவர் கூறியதாவது:
இன்று கரூர் மாவட்டத்தில் தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரில் 40 பேர் குடும்பங்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலா ரூ.50,000 வீதம் ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள ஒரு நபருக்கு, அவர் வர இயலாத காரணத்தினால் நேரில் சென்று அவருக்கு ரூ.50,000 வழங்கப்பட உள்ளது. கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்திற்கு தமிழக அரசு விரைந்து மருத்துவ உதவி செய்து கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கி துரிதமாக செயல்பட்டது.
குறிப்பாக தமிழக முதல்-அமைச்சர் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டார் என்பதை நாடறியும். சுப்ரீம் கோர்ட்டில் தவெக சார்பில் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தடை கோரிய வழக்கு தொடுத்திருக்கிறது.
நேற்றைய விசாரணையில், சுப்ரீம் கோர்ட்டு, சென்னை ஐ கோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருக்கும் போது, ஏன் சென்னை ஐ கோர்ட்டு வேறொரு வழக்கை விசாரணை செய்தது என்பது குறித்து விளக்கங்கள் மட்டுமே கேட்டது. சென்னை ஐ கோர்ட்டில் நடைபெற்ற வழக்கில், நீதிபதி தனது அதிகார எல்லைக்கு உட்பட்டு விசாரணை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதில் எந்த தலையீடும் இல்லை. நீதித்துறையும் சுதந்திரமாக செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். செந்தில் பாலாஜி எந்த கட்சி என்று பார்க்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்கவும் அரசின் நிவாரணத் தொகை கிடைக்கவும் பங்களிப்பு செய்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியும் சிறிதளவு பங்களிப்பு செய்ய வேண்டும்; துயரத்தில் உள்ளவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க வேண்டும் என்பதால் இன்று நிவாரண தொகை வழங்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்