“பல கல்வெட்டுகள், செப்பேடுகள், சுவடிகளைப் பதிப்பித்துத் தமிழுக்குப் பெருந்தொண்டாற்றிய கல்வெட்டு அறிஞர் புலவர் ராசுவின் மறைவு தமிழ் ஆய்வுலகத்துக்குப் பேரிழப்பு ஆகும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “புகழ்பெற்ற கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு (85) வயது மூப்பின் காரணமாக மறைந்தார் என அறிந்து வருத்தமுற்றேன். பல கல்வெட்டுகள், செப்பேடுகள், சுவடிகளைப் பதிப்பித்துத் தமிழுக்குப் பெருந்தொண்டாற்றிய அவரது மறைவு தமிழ் ஆய்வுலகத்துக்குப் பேரிழப்பு ஆகும்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தமிழறிஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கல்வெட்டு அறிஞர் புலவர் ராசு உடல் நலக்குறைவு காரணமாக புதன்கிழமை காலை காலமானார். அவருக்கு வயது 85. மறைந்த கல்வெட்டு அறிஞர் புலவர் ராசு, தமிழக அரசின் தொல்லியல் துறையில் பணிபுரிந்தவர். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வெட்டு தொல்லியல் துறை தலைமை பொறுப்பு வகித்தபோது பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவர். பேரூராதீன புலவர், கல்வெட்டியல் கலைச்செம்மல், திருப்பலிச் செம்மல் உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றவர்.
புலவர் ராசு உடல்நலக் குறைவு காரணமாக, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில், புதன்கிழமை காலை 8 மணிக்கு அவர் உயிரிழந்தார். மறைந்த புலவர் ராசுவுக்கு கவுரி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.