குமரி மட்டி வாழைப்பழம், ஜடேரி நாமக்கட்டி, வீரவநல்லூர் செடி புட்டா சேலைக்கு புவிசார் குறியீடு

கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம், ஜடேரி நாமக்கட்டி, வீரவநல்லூர் செடி புட்டா சேலை ஆகிய 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக, அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்கத் தலைவர் ப.சஞ்சய்காந்தி நேற்று தெரிவித்தார்.

இதுகுறித்து தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழகத்தைச் சேர்ந்த 58 பொருட்கள் உட்பட நாட்டில் 450-க்கும் அதிகமான பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. நாட்டிலேயே அதிக பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

2020 ஆக.28-ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஜடேரி திருமண் (நாமக்கட்டி) தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நாமக்கட்டிக்கும், 2021 ஜூன் 15-ம் தேதி தமிழ்நாடு அரசின் கைத்தறி துறை உதவியுடன் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் சவுராஷ்டிரா நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் சார்பில் செடி புட்டா சேலைக்கும், 2021 ஏப்.29-ம் தேதி மதுரை அக்ரி பிசினஸ் இன்குபேஷன் அமைப்பு சார்பில் கன்னியாகுமரி மட்டி வாழைப்பழத்துக்கும் புவிசார் குறியீடு அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கப்பட்டது. இந்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், மார்ச் 30-ம் தேதி மத்திய அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து, 4 மாதங்கள் கடந்த நிலையில், விண்ணப்பங்களுக்கு மறுப்புகள் எதுவும் வராததால், ஜடேரி நாமக்கட்டி, செடி புட்டா சேலை, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் நேற்று கிடைத்துள்ளது.

இதனால், இந்த 3 பொருட்களின் விற்பனை விலை உயர்ந்து, இவற்றை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் வாழ்வாதாரம் உயரும். இப்பொருட்களுக்கென தனி சட்டப் பாதுகாப்பு கிடைக்கும். இப்பொருட்களை பல்வேறு நாடுகளில் விற்பனை செய்ய உலக அங்கீகாரம் கிடைக்கும் என தெரிவித்தார்.