சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் வலியுறுத்துகின்றனர். திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு விருப்பமான 10 தொகுதிகளின் பட்டியலை திமுகவிடம் கொடுத்துள்ளனர்.
மேலும் ஒதுக்கப்பட்ட நான்கு தொகுதிகளில் மூன்றில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் மதிமுக போட்டியிட உள்ளது. கட்சியின் பதிவை பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதன்காரணமாக தனி சின்னத்தில் போட்டியிடும் தொகுதியில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிர்பந்தமும் மதிமுகவுக்கு உள்ளது. எனவே, தனி சின்னத்தில் பிரபலமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிட வேண்டும் எனவும் பெரும்பாலான மதிமுகவினர் வலியுறுத்தியுள்ளதாகவும் இறுதி முடிவை வைகோ எடுப்பார் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.



