சிங்கார சென்னைக்கு அழகூட்டும் ஒப்பனை அறைகள்: தூய்மையான பராமரிப்பால் மக்களிடம் வரவேற்பு

சென்னையில், மாநகராட்சி சார்பாக 800-க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை பெரும்பாலும் வெளியூரில் இருந்து வந்து செல்வோரும், வாகன ஓட்டிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.

அதேபோல் மாநகராட்சியின் முக்கியமான பகுதிகளிலும் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருப்பதால், பொது மக்களுக்கு உதவிகரமாகவும் இருக்கின்றன. இவற்றில் தற்போது சுமார் 300 கழிப்பறைகள் சேதமடைந்த நிலையிலும், மறுசீரமைக்கப்பட்டும் வருகின்றன. மீதமுள்ள 500 கழிப்பறைகள் தினசரி பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

இந்நிலையில் அடுத்தக்கட்டமாக மாநகராட்சி சார்பில் மேம்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக் கழிப்பறைகளை, சென்னையில் முக்கிய சாலையோரங்களிலும், பேருந்து நிலையங்கள் போன்ற பகுதிகளிலும் அமைத்தது. ஆனால் இவை நகரவாசிகளிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை. மேலும் இவை அடிக்கடி பழுதடைந்து வந்த நிலையில், தற்போது சென்னையில் வெறும் 60 எலக்ட்ரானிக் கழிப்பறைகள் மட்டுமே செயல்பட்டு கொண்டிருக்கின்றன.

இதையடுத்து மக்களுக்கு இடவசதியுடன் கூடிய புதிய ஒப்பனை அறைகளை மாநகரம் முழுவதும் அமைக்க கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி திட்டமிட்டிருந்தது. அதன்படி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.51.08 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகரில் ஒப்பனை அறைகளை கட்ட கடந்த ஆண்டு மார்ச் மாதம் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன. அந்த வகையில் இதுவரை சென்னை மாநகராட்சி பகுதிகளில் 250 புதிய ஒப்பனை அறைகள் கட்டப்பட்டுள்ளன.