தமிழக மீனவர்களை கைது செய்யும் சிறிலங்கா கடற்படையின் அத்துமீறலுக்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கச்சத்தீவை ஒட்டிய இந்தியக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை படகுகளுடன் சிறைபிடித்த சிறிலங்கா கடற்படையினரின் அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தடைக்காலம் முடிவடைந்து மீண்டும் மீன்பிடி தொடங்கிய மூன்றாவது வாரத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள மூன்றாவது கைது நடவடிக்கை இதுவாகும். முதலில் 9 பேரை கைது செய்து விடுதலை செய்த இலங்கை கடற்படை பின்னர் 22 மீனவர்களை கடந்த 21ம் நாள் கைது செய்தது. நேற்று முன்நாள் அவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இப்போது 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு குழுவினர் விடுவிக்கப்பட்ட பின்னர், அடுத்த குழுவை கைது செய்வது என இலங்கை கடற்படை திட்டமிட்டு அத்துமீறுகிறது.
கடந்த முறை கைது செய்யப்பட்ட 22 மீனவர்களை சிறிலங்கா நீதிமன்றம் விடுதலை செய்திருக்கும் போதிலும், அவர்களின் படகுகள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டால், 2 அல்லது 3 ஆண்டுகள் சிறைவைக்கப்படுவார்கள் என்று சிறிலங்கா நீதிமன்றம் எச்சரித்திருக்கிறது. தமிழக மீனவர்கள் உண்மையாகவே எல்லை தாண்டினார்களா? என்பதையெல்லாம் ஆராயாமல், இலங்கை கடற்படையினர் கைது செய்தாலே, தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும், சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிப்பதும் நியாயமல்ல. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கான திட்டமிடப்பட்ட சதியாகவே இது தோன்றுகிறது.
தமிழக – இலங்கை மீனவர் பிரச்சினை என்பது காலம் காலமாக நீடித்து வருகிறது. தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் பகுதிகளில் தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கை ஆகும். இது தொடர்பாக இந்திய – சிறிலங்கா அரசு அதிகாரிகள் மற்றும் மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணவும், சிறிலங்கா படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்டவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 15 பேரை விடுதலை செய்யவும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.