சுயேச்சைகளுக்காக பிஸ்கட், ரொட்டி, செங்கல் உள்பட 188 சின்னங்கள் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுக்காக தேர்தல் ஆணையம் 188 சின்னங்களை அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளுக்கு அக்கட்சி சின்னங்கள் ஒதுக்கப்படும். ஆனால், அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்காக தேர்தல் ஆணையம் 188 வகையான சின்னங்களை அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இம்மாதம் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. 28-ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வேட்பு மனுத் தாக்கல் முடிந்து, அதன் மீதான பரிசீலனை செய்யப்பட்டு இறுதியாக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்போது அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுக்கான சின்னம் ஒதுக்கப்படும்.

இதற்காக குளிர்சாதனம், அலமாரி, ஆட்டோ ரிக்சா, நடைவண்டி, பலூன், வளையல்கள், கிரிக்கெட் மட்டை, மின்கல விளக்கு, வார்ப்பட்டை, மிதிவண்டி காற்றடிக்கும் குழாய், இரட்டை தொலைநோக்காடி, பிஸ்கட், கரும்பலகை, பெட்டி, ரொட்டி, செங்கல், கைப்பெட்டி, வாளி, கேக், புகைப்படக் கருவி, தரை விரிப்பு, கேரம் பலகை உள்ளிட்ட 188 வகையான சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.