செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை – 60 நில சொத்து ஆவணங்கள்; ரூ.22 லட்சம் ரொக்கமும் சிக்கியதாக தகவல்

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 9 இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையில் ரூ.22 லட்சம் ரொக்கம், ரூ.16.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள், 60 நில சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பண மோசடி வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய கரூர், திண்டுக்கல், கோவை, நாமக்கல் உள்ளிட்ட 9 இடங்களில் கடந்த 3-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

மத்திய பாதுகாப்பு படையினர்: கரூர் ஆண்டாங்கோயில் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின்உதவியாளர் சங்கர் வீடு, செங்குந்தபுரத்தில் உள்ள அவரது நிதி நிறுவனம், சின்ன ஆண்டாங்கோயிலில் உள்ள கிரானைட் நிறுவன உரிமையாளர் பிரகாஷ் வீடு, அவரதுநிறுவனம், கோவை ராமநாதபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளார் முத்துபாலன் வீடு, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதன் வீடு, அலுவலகம் உள்பட செந்தில் பாலாஜியின் நெருக்கமானவர்களின் பலரது வீடுகள், அலுவலகங்களில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அந்தவகையில் இந்த சோதனையில், சிக்கிய பணம், ஆவணங்களின் விவரங்கள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியுடன் தொடர்புடைய 9 இடங்களில் கடந்த 3-ம் தேதி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், ரூ.22 லட்சம் ரொக்கம், ரூ.16.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள், 60 நில சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.