அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என சென்னைஉயர் நீதிமன்ற 3-வது நீதிபதி தீர்ப்பளித்துள்ள நிலையில், அமலாக்கத் துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்த நிலையில் அவரை விடுவிக்கக் கோரி அவருடைய மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, டி.பரத சக்ர வர்த்தி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் என நீதிபதி நிஷாபானுவும், அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கை சட்டப் பூர்வமானது தான் என நீதிபதி டி.பரத சக்ர வர்த்தியும் தீர்ப்பளித்து இருந்தனர்.
காவலில் எடுக்க அனுமதி: இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன், நீதிபதி டி.பரத சக்ர வர்த்தியின் தீர்ப்பை உறுதி செய்தார். அவர் தனது தீர்ப்பில், செந்தில் பாலாஜியும் சட்டத்துக்கு உட்பட்டவர்தான் என்பதால் அவரை அமலாக்கத் துறை கைது செய்தது செல்லும் என்றும், அவர் பரிபூரணமாகக் குணமடைந்த பிறகு அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா,உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக் கூடும் என்பதால், அமலாக்கத் துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் 3-வது முறையாக கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் விசாரணை: அதில், செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டால், எங்களது தரப்பு வாதத்தையும் கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரியுள்ளது. செந்தில் பாலாஜி கைது தொடர்பான வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் வரும் 24-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத் தக்கது.