சென்னையில் பாரம்பரிய சிறுதானிய உணவுத் திருவிழா

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ‘வேளாண் வணிக திருவிழா’ எனப்படும் வேளாண் விளைபொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நாளை (8-ந்தேதி) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள இந்த வணிக திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (8-ந்தேதி) காலை 10.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

இந்த கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக பாரம்பரிய மற்றும் சிறுதானிய உணவகங்கள் பங்கேற்கும் உணவுத் திருவிழாவும் இடம்பெறுகிறது. 100-க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்களின் பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய உள்ளனர். உணவு பதப்படுத்தும் மற்றும் மதிப்பு கூட்டும் எந்திரங்களும் இடம்பெறுகின்றன.

இந்த திருவிழாவில் வல்லுனர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகள், உற்பத்தியாளர், கொள்முதலாளர் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. சிறந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.