சென்னை அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

கை அகற்றப்பட்ட நிலையில் எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் தஸ்தகீர். இவரது ஒன்றரை வயது மகன் முகமது மகிருக்கு, தலையில் நீர் வழிந்ததால் சிகிச்சைக்காக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த குழந்தையின் வலது கை அழுகியதால், அந்த கை அகற்றப்பட்டது. தவறான சிகிச்சையால்தான் குழந்தையின் கை பாதிக்கப்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக விசாரணை நடத்த 3 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் உயிரிழப்புக்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் என பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

பின்புலம்: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் – அஜிஸா தம்பதியரின் ஒன்றரை வயது மகன் முகமதுமகிர். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சமீபத்தில் குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் வலது கை கறுப்பாக மாறியதுடன் செயலிழந்து, அழுகியது. பின்னர், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட குழந்தையின் வலது அகற்றப்பட்டது.

இதற்கிடையே, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விரிவான விசாரணை நடத்த மருத்துவமனையின் ரத்தநாள அறுவை சிகிச்சைத் துறை இயக்குநர் என்.ஸ்ரீதரன், பொது அறுவை சிகிச்சைத் துறை இயக்குநர் பி.எஸ்.சாந்தி, ரத்தவியல் பிரிவு மற்றும் குழந்தைகள் நலத்துறை தலைவர் சி.ரவிசந்திரன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு விசாரணை அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. அதன் விவரம்:

ஒன்றரை வயதான குழந்தை முகமது மகிர், குறைந்த எடையுடன் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தை. தற்போது தீவிர எடை குறைவுடனும், இருதயத்தில் ஓட்டையுடனும், தலையில் ஏற்பட்ட ரத்தக் கசிவால் மூளை மண்டலத்தில் உள்ள நீர் வெளியேறும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு தலைவீக்கத்தால் அவதிப்பட்டு வந்ததுள்ளது.

முகமது மகிர் 5 மாத குழந்தையாக இருக்கும்போது, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வி-பி ஷண்ட் என்று சொல்லப்படும் ஓர் அறுவை சிகிச்சை மூலம் மூளை மண்டலத்தில் இருந்து வயிற்றுப் பகுதிக்கு ஒரு நுண்ணிய குழாய் பொருத்தப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் குழந்தைக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டது. பின்னர், தீவிர சிகிச்சை மூலம் குழந்தை குணமடைந்துள்ளது.

வி-பி ஷண்ட் குழாயில் பிரச்சினை ஏற்பட்டதால், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஜூன் 25-ம் தேதி மாலை 3.58 மணிக்கு குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. உடனே இருதயவியல், மயக்கவியல் மருத்துவர்கள் பரிசோதனை செய்து, அறுவை சிகிச்சையில் குழந்தைக்கு ஆபத்துகள் நேரலாம் என்று குழந்தையின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

பெற்றோரிடம் சம்மதம் பெற்று, அன்று இரவே அறுவை சிகிச்சை செய்து ஆசனவாய் வழியாக புதிய வி-பி ஷண்ட் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. தொடர் கண்காணிப்பில் இருந்த குழந்தைக்கு வாய் வழியாக உணவு அளிக்கப்பட்டு, நரம்பு வழியாக மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளது. ஷண்ட் குழாயை ஆய்வு செய்ததில் நுண் கிருமி இருப்பது ஜூன் 28-ம் தேதி தெரியவந்தது. மேலும், குழந்தைக்கு மூளைத் தொற்று இருப்பது உறுதியானது.

ஜூன் 29-ம் தேதி குழந்தையின் வலது கையில் சிவப்பு நிறம், வீக்கம் ஏற்பட்டதை, பணியில் இருந்த செவிலியரிடம் குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார். முதுநிலை மருத்துவ மாணவரும் அன்று இரவு குழந்தையை பரிசோதித்துள்ளார். 30-ம் தேதி சிரை நாளங்களின் அழற்சி ஏற்பட்டிருப்பதை உறுதிசெய்த மருத்துவர்கள், அதற்கான சிகிச்சையை அளித்துள்ளனர்.

ஜூலை 1-ம் தேதி கையின் நிறமாற்றம் அதிகரித்து, கை அசைவும் குறைந்து, ரத்த ஓட்டம் குறைந்ததை பரிசோதனையில் கண்டறிந்த மருத்துவர், ரத்த நாளப் பிரிவு மருத்துவரிடம் தெரிவித்து ஆலோசனை பெற்றுள்ளார். பின்னர், பரிசோதனை மூலம் ரத்தநாளத்தில் அடைப்பு இருப்பதும், கையின் தசைகள் முற்றிலும் செயலிழந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

வலது கையை காப்பாற்றுவது கடினம். அதேநேரத்தில் அந்தக் கையை உடனடியாக அகற்றாவிட்டால் உயிர் பாதிப்பு ஏற்படும் என்பதால், அன்று மாலையே குழந்தை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, செயலிழந்த வலது கை அகற்றப்பட்டுள்ளது.

குழந்தை அனுமதிக்கப்பட்ட உடனேயே காலதாமதமின்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. குழந்தைக்கு கையில் வென்ஃப்ளான் ஊசி தமனியில் போடவில்லையென்று பெற்றோர், மருத்துவர்களின் வாக்குமூலம் மூலமாக உறுதியாகிறது. மருந்து கசிவினால் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்படவில்லை என்பதும் உறுதி செய்யப்படுகிறது.

குழந்தையின் வலது கையில் வலி மற்றும் நிறமாற்றம் ஏற்பட்ட பின் செவிலியர் மற்றும் மருத்துவர்கள் குழந்தையைப் பரிசோதனை செய்துள்ளனர். குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர் ரத்த உறைவுக்கு சிகிச்சை அளித்துள்ளார். ரத்தநாள அடைப்பு, செலுத்தப்பட்ட மருந்து, மற்ற சிகிச்சைகளால் ஏற்படவில்லை. கிருமியினால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்த நாளத்தை பாதித்ததால், குழந்தைக்கு வலது கையில் ரத்த ஓட்டம் பாதிப்பு ஏற்பட்டு உயிரை காப்பாற்றும் முயற்சியில் வலது கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.