“டெல்லியில் முடிவான ஒப்பந்தத்தை சொல்லும் வெறும் ‘அறிவிப்பாளர்’ பழனிசாமி” – திமுக விமர்சனம்

 டெல்லியில் முடிவு செய்யப்பட்ட ஒப்பந்த அறிவிப்பைச் சொல்லும் வெறும் ‘அறிவிப்பாளர்’ பதவியை மட்டும் பெற்றதில் பழனிசாமிக்கு என்ன பெருமை வேண்டியிருக்கிறது என்று திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் இ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டு இடங்களை அதிமுக அலுவலகத்தில் அறிவித்ததற்காக எதையோ சாதித்து விட்டது போலப் பெருமைப்பட்டுக் கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி. கடந்த ஆண்டு ஸ்டார் ஹோட்டலில் தான் மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அதிமுக – பாஜக கூட்டணி உருவானது.

அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அமித் ஷாவுக்கு கட்டுப்பட்டு, பேசக்கூடத் திராணி இல்லாமல் அமர்ந்திருந்தார் பழனிசாமி. கூட்டணி முடிவான பிறகு தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதற்காக அமித்ஷாவை சந்திக்க டெல்லிக்கு 4 முறை சென்றார் எடப்பாடி. அனைத்தையும் பேசி முடித்தது அமித் ஷா. தொகுதிப் பங்கீட்டு எண்ணிக்கையை மட்டும் சொல்லும் வெறும் ’அறிவிப்பாளர்’ பதவியை மட்டும் பெற்றதில் பழனிசாமிக்கு என்ன பெருமை வேண்டியிருக்கிறது ?

“மாப்ள அவர்தான். ஆனா அவர் போட்டிருக்கிற சட்டை என்னுடையது” என்ற காமெடியை போல அமித் ஷா எழுதிக் கொடுத்த கணக்கை அதிமுக அலுவலகத்தில் வாசித்திருக்கிறார் பழனிசாமி. இதில், “கூட்டணியை உறுதி செய்து விட்டோம்” என்ற வெற்று பெருமை வேறு. ஏதோ பெரிதாக சாதித்ததைப் போலச் சிரிப்புக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

“தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்த நிகழ்வையாவது அதிமுக அலுவலகத்தில் வைத்துக் கொள்ள அனுமதியுங்கள் ஆலம்பனா” என மண்டியிட்டு அனுமதி வாங்கி அறிவித்திருக்கிறார் பழனிசாமி. கடுமையான விமர்சனத்திற்கு பிறகே அதிமுக அலுவலகத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது வெறும் கண் துடைப்புதான். முழுசா நனைந்த பிறகு முக்காடு எதற்கு ? என்பது போல, டெல்லியில் அமித்ஷாவிடம் உத்தரவு வாங்கிவிட்டு, இரண்டு நாள் கழித்து சென்னையில் ஒப்பந்தம் கையெழுத்திடுவது எதற்காக ?