தமிழக உள்துறைச் செயலராக இருந்த தீரஜ்குமாரை மாற்றிவிட்டு, க.மணிவாசனை புதிய உள்துறைச் செயலராக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக மீண்டும் டேவிட்சன் தேவாசிர்வாதமே தொடர்வதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 15-ம் தேதி வெளியானது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக பறக்கும் படைகள், நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, வாகன சோதனை, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுதவிர, தமிழகத்துக்கு 250 கம்பெனி துணை ராணுவப் படையும் ஒதுக்கப்பட்டு, அவர்களும் தொடர்ச்சியாக தமிழகம் வந்தவண்ணம் உள்ளனர். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அனைத்துக் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
8 எஸ்.பி.க்கள் மாற்றம்: தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு, புகார்கள் அடிப்படையில் அரசுத் துறை அதிகாரிகள் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், விருதுநகர், நாமக்கல், கரூர் உட்பட 8 மாவட்ட எஸ்.பி.க்கள் ஏற்கெனவே மாற்றப்பட்டனர். பின்னர், தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்துக்கு அனுமதி மறுத்தது, காவல் துறை போதிய பாதுகாப்பு வழங்காதது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் சென்றன.
புதிய டிஜிபி நியமனம்: இதையடுத்து, கடந்த ஏப்.2-ம் தேதி தமிழக காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக இருந்த ஜி.வெங்கடராமன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக, சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார்.
இதுதவிர, தாம்பரம் காவல் ஆணையர் ஏ.அமல்ராஜுக்கு பதிலாக சஞ்சய்குமார், மதுரை காவல் ஆணையர் ஜெ.லோகநாதனுக்கு பதிலாக அபிஷேக் தீக்ஷித் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த சரவண சுந்தர் மாற்றப்பட்டு ரம்யா பாரதி நியமிக்கப்பட்டார். சேலம் ஆட்சியராக அருண் தம்புராஜ், தூத்துக்குடி ஆட்சியராக விசு மகாஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.





