கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார். இதையொட்டி, தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: இளம் மற்றும் புத்திக்கூர்மை வாய்ந்த காவல் அதிகாரி விஜயகுமாரின் மறைவு செய்தியறிந்து வேதனை அடைகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: கோவை சரக டிஜஜி விஜயகுமார்மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். தனது பணிக்காலத்தில் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழக காவல் துறைக்குப் பெருமை சேர்த்தவர் விஜயகுமார். அவரது மரணம், தமிழக காவல் துறைக்குப் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: கோவை சரக டிஐஜி விஜயகுமார் மரணமடைந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். வழக்கமான நடைப்பயிற்சி முடித்து வந்த அவர், தனது பாதுகாவலரின் கைத்துப்பாக்கியை வாங்கி, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுவது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. எனவே, விஜயகுமாரின் தற்கொலையை சிபிஐ மூலம் விசாரிக்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: குடும்ப சூழ்நிலை காரணமாக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், பணிச்சுமையும், மனஉளைச்சலும்கூட காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் நிலவுகிறது. இது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை: டிஐஜி விஜயகுமாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரம், காவல்துறை உயரதிகாரி ஒருவரின் தற்கொலையை எளிதாகக் கடந்துசெல்ல முடியாது. இதற்கான பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்ட செய்தி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படித்துப் பட்டம் பெற்று, காவல் துறையில் உயர் பதவிக்கு வந்த விஜயகுமார், எத்தகைய மன அழுத்தத்துக்கு உள்ளானார் என்பதை யூகிக்க முடியவில்லை. அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய கண்ணீர் அஞ்சலி.
பாமக நிறுவனர் ராமதாஸ்: கோவை சரக டிஐஜி விஜயகுமார் திறமையான காவல் துறை அதிகாரி.நேர்மையானவர். அவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டதை நம்ப முடியவில்லை. அவரது மன அழுத்தத்துக்கான காரணம் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: டிஐஜி விஜயகுமாரின் தற்கொலை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. காவல்துறை உயரதிகாரியின் தற்கொலையை அவ்வளவு எளிதாகக் கடந்துவிட முடியாது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: டிஐஜியாக பணியாற்றி வந்த துடிப்பான இளம் அதிகாரி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: காவல் துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில் நேர்மையான அதிகாரியாக இருந்த டிஐஜி விஜயகுமாரின் தற்கொலை, பேரிழப்பாகும். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்துவிசாரிக்க வேண்டும்.
இந்திய கம்யூ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: காவல் பணியில் 14 ஆண்டுகளாக துடிப்புடன் பணியாற்றி விஜயகுமார், சவால் நிறைந்த வழக்குகளில் குற்றவாளிகளைக் கைது செய்தவர். அவர் இப்படி ஒரு முடிவெடுக்க என்ன காரணம்? அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.
விசிக தலைவர் திருமாவளவன்: காவல் அதிகாரியின் தற்கொலை மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதிகாரிகள் பணியில் இருக்கும் காலத்தில் தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம் என்பதை அரசு கண்டறிய வேண்டும்.
இதேபோல, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின், பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, சமக தலைவர் ரா.சரத்குமார், வி.கே.சசிகலா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதேபோல, தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத் தலைவரும், டிஜிபி-யுமான ஆபாஷ் குமாரும் இரங்கல் தெரிவித்துள்ளார்.