“தவெக ஆட்சியில் ஏஐ அமைச்சகம் உருவாக்கப்படும்” – கன்னியாகுமரியில் விஜய் வாக்குறுதி

‘தவெக ஆட்சியில் நாட்டின் ஏஐ தலைநகராக தமிழ்நாடு மாறும். தமிழகத்தில் முதல் ஏஐ தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். தமிழகத்தில் ஏஐ நகரம் உருவாக்கப்படும். தவெக ஆட்சியில் ஏஐ அமைச்சகம் உருவாக்கப்படும்’ என தவெக தலைவர் விஜய் கூறினார்.

கன்னியாகுமரியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய விஜய், “என் நெஞ்சில் குடியிருக்கும் கன்னியாகுமரி, காரைக்குடி மக்களுக்கு வணக்கம். அன்று காரைக்குடியில் என்னால் பேச முடியாமல் போனது. இப்போது தவெக ஆட்சியின் சில திட்டங்களை அறிவிக்கிறேன். தவெக அரசு அமைந்தால், நம் ஆட்சியில் லஞ்சம் இல்லாமல் ஒவ்வொருவருக்கும் நலத்திட்டம் போய் சேரும். அதற்காக ஆதார் அட்டை போல தமிழகத்தில் ஒரு அடையாள அட்டை உருவாக்கப்படும். ஏஐ தரவுடன், லஞ்சம் இல்லாமல் நலத்திட்டங்கள் இந்த அட்டை மூலம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க தேவையில்லை.

இப்போது அரசு அலுவலகங்களில் நமக்கு ஒரு வேலை ஆக வேண்டுமானால், பல்வேறு இழுத்தடிப்புகள் செய்கிறார்கள். இதற்கு காரணம் லஞ்சம் தான். இவ்வாறு வாங்கப்படும் லஞ்சம் அதிகாரிக்கு மட்டுமின்றி, அமைச்சருக்கும் செல்கிறது.

அதேபோல, தவெக ஆட்சியில் தமிழ்நாடு சேவை உறுதி திட்டம் உருவாக்கப்படும். ஆப் மூலமாக ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றை இடைத்தரகர் இல்லாமல், லஞ்சம் இல்லாமல் பெறலாம். பட்ஜெட்டை ஒரு ஆவணமாக மட்டும் நமக்குத் தெரியும். அந்த நிதி எங்கே செல்கிறது என நமக்கு தெரியாது. அது சிதம்பர ரகசியம் போல ஸ்டாலின் சார் ரகசியமாக உள்ளது.

தவெக ஆட்சியில், இணையதளம் மூலமாக அரசின் திட்டங்களுக்கு மக்கள் ஆலோசனை வழங்கலாம், பட்ஜெட்டை கண்காணிக்கலாம். நாட்டின் ஏஐ தலைநகராக தமிழ்நாடு மாறும். தமிழகத்தில் முதல் ஏஐ தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். தமிழகத்தில் ஏஐ நகரம் உருவாக்கப்படும். தவெக அரசின் கீழ் ஏஐ அமைச்சகம் உருவாக்கப்படும்.

தமிழகத்தில் நிதி இறையாண்மை கொண்ட மாநிலமாக மாற்றப்படும். நம் மாநிலத்தின் கடன் 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது, இதனை மாற்ற வேண்டும். இதுபோன்ற ஆட்சி நமக்கு வேண்டும். இதுவரை நம்மை ஏமாற்றிய அனுபவசாலிகளின் ஆட்சி போதும்’ எனத் தெரிவித்தார்.