தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் இயங்கும் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தை 2 ஆண்டுகளில் காலி செய்து கொடுக்க வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம், சோழிங்கநல்லூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகை அடிப்படையில் இயங்கி வருகிறது. இந்நிலையில் தங்களது கட்டிடத்தை காலி செய்து தரக் கோரி உரிமையாளர்களான கோட்டூர்புரம் சரத்குமார், வெங்கடேஷ், சவுத்ரி ஆகியோர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிறப்பித்த உத்தரவில், இந்த கட்டிடத்துக்கான வாடகையை ரூ. 6 லட்சத்தில் இருந்து ரூ. 13 லட்சமாக உயர்த்தியும், இந்த கூடுதல் தொகையான ரூ. 2.18 கோடியை கடந்த ஆண்டு டிசம்பருக்குள் மனுதாரர்களுக்கு வழங்க வேண்டுமென்றும், 2 ஆண்டுகளில் அந்த கட்டிடத்தை காலி செய்து மனுதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு சொந்த கட்டிடம் கட்ட நிலம் தேர்வு செய்யப்பட்டு விட்டது.
பிப்.13-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். 18 மாதங்களில் அந்த கட்டிடம் கட்டி முடிக்கப்படும். அதுவரை தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், வாடகையை உயர்த்தியும், 2 ஆண்டுகளில் காலி செய்து கொடுக்க வேண்டுமென்றும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்து விசாரணையை 2 மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.





