திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை அடுத்த ஆர்.கோம்பை கிராமத்தில் வந்தவழி பெரியகருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா வெகுசிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த வருடத்திற்கான திருவிழாவை முன்னிட்டு கோவிலில் நேர்த்திக்கடன் வைத்திருந்த பக்தர்கள் ஆடுகள், அரிசி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக வழங்கினர்.
பக்தர்கள் சார்பில் 355 ஆடுகள் மற்றும் ஏராளமான கோழி, சேவல்கள் காணிக்கையாக வழங்கப்பட்டன. இவற்றை கொண்டு ராட்சத அண்டாக்களில் அசைவ உணவு தயாரிக்கும் பணி நடைபெற்றது. பெரியகருப்பசாமிக்கு படையல் இடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதனைதொடர்ந்து தயாரிக்கப்பட்ட அசைவ உணவு பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.
பிற்பகலில் தொடங்கிய இந்த விருந்து இரவு வரை நீடித்தது. இந்த விழாவில் ஆர்.கோம்பை மட்டுமின்றி சுற்றுப்புரத்தை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு கருப்பசாமியை வழிபட்டு சென்றதுடன் விருந்திலும் பங்கேற்று உணவருந்தி சென்றனர்.