திமுக-வை வீழ்த்த வேண்டுமென்றால் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே சரியாக இருக்கும்” என தவெக தலைவர் விஜய்க்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு குறிப்பால் உணர்த்தினார்.
இது தொடர்பாக நேற்று அவர் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தீப்பெட்டி தொழிலுக்கு சவாலாக உள்ள பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய வலியுறுத்தி உற்பத்தியாளர்கள், மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்துள்ளனர். அப்போது, மெழுகு தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் தொடர்பாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்கு, விரைவில் மாற்று ஏற்பாடு செய்யப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் ஏற்கெனவே சிபிஐ விசாரணைக்கு நடிகர் விஜய் 2 முறை ஆஜராகி இருக்கிறார். அதனால் இப்போது அவரை விசாரணைக்கு அழைத்திருப்பதில் எந்த அரசியலும் இருப்பதாகத் தெரியவில்லை.
அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதிசெய்யப்பட வில்லை. எங்களுக்கு இன்னும் அவகாசம் இருக்கிறது. திமுக-வை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எங்களது குறிக்கோள். இதனையே கட்சி தொடங்கியதில் இருந்து விஜய் தெரிவித்து வருகிறார். மேலும், எங்களது அரசியல் எதிரி திமுக தான் என்றும் தெரிவித்து வருகிறார். எங்களை பொறுத்தவரை திமுக-வை வீழ்த்த வேண்டு மென்றால் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் சரியாக இருக்கும். அதன் பின்னர் அவரவர் முடிவு. இவ்வாறு அவர் கூறினார்.





