“திமுக ஆட்சியில் இந்துக்களின் உணர்வுகள் தொடர்ந்து புண்படுத்தப்படுகின்றன. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அதற்கு ஸ்டாலின் அரசு கண்டிப்பாக பதில் சொல்லியே ஆக வேண்டும்,” என தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜக சார்பில் கோவை மாவட்டம் எட்டிமடை பகுதியில் நடைபெறும் மகளிர் அணி பயிற்சி முகாமில் மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று கலந்து கொண்டார். முன்னதாக இன்று காலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ”கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகள் குறித்து பாஜக-வுக்கு நன்றாகத் தெரியும். மஞ்சளுக்கு தனி வாரியம் அமைத்ததே பாஜக தான். பாஜக, அதிமுக கூட்டணி தற்போது மிகவும் வலுவாக உள்ளது. திமுக ஆட்சியில் மக்களின் குரல்வளை நெரிக்கப்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அதற்கு ஸ்டாலின் அரசு கண்டிப்பாக பதில் சொல்லியே ஆக வேண்டும். அந்த விவகாரத்தில் நீதிபதியின் மீதே குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்களின் உணர்வுகள் தொடர்ந்து புண்படுத்தப்படுகின்றன. இதற்கான பதில் 2026-ம் ஆண்டு தேர்தலில் நிச்சயம் கிடைக்கும்.
திமுக எதிர்ப்பு தொடர்பான தவெக தலைவர் விஜய் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் அதிக ஊழல் நடைபெற்ற மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக உள்ளது. திமுக அரசு எத்தனை திட்டங்களுக்கு காந்தி பெயரை வைத்துள்ளது.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். திமுக ஒரு தீய சக்தி என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. விஜய்க்கும் அவ்வாறு சொல்ல வேண்டிய நிலை வந்துள்ளது” என்று தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.





