திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மக்களவை, மாநிலங்களவை என இரண்டுக்கும் சேர்த்து திமுக குழு தலைவராக கனிமொழியை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மக்களவை பொதுத் தேர்தலில் பாஜக கூட்டணி293 இடங்களை பெற்று 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி கைப்பற்றியது.

இந்நிலையில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு உரியவர்களை நியமித்துமுதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்பு: மக்களவை, மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து நாடாளுமன்ற திமுக குழு தலைவராக துணை பொதுச் செயலாளர் கனிமொழியும், மக்களவை குழுதலைவராக பொருளாளர் டி.ஆர் பாலுவும், மக்களவை குழு துணை தலைவராக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறனும், மக்களவை கொறடாவாக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவும் நியமிக்கப்படுகின்றனர்.

மாநிலங்களவை குழு தலைவராக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா, மாநிலங்களவை குழு துணை தலைவராக தொமுச பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம், மாநிலங்களவை கொறடாவாக சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பி.வில்சன், இரு அவைகளின் பொருளாளராக கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.