திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு கோபுர சுவர் நள்ளிரவில் இடிந்தது

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் கோபுரத்தின் சுவரின் ஒரு பகுதி இடிந்தது.

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. நள்ளிரவு நேரம் சுவர் இடிந்து விழுந்தது என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் அரங்கநாதன் கோவிலின் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் இரண்டு நிலைகளிலும் மேற்கூரை பூச்சுகளும் அதனை தாங்கி நிற்கும் தூண்களும் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. அபாயகரமாக உள்ள இந்த கிழக்கு வாசல் கோபுர வழியாகச் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இதனால் அச்சத்துடன் செல்லும் நிலையே நிலவியது. இதனிடையே, நேற்று மாலை திருச்சி பகுதிகளில் 30 நிமிடங்கள் வரை நல்ல மழை பெய்தது.

இதனையடுத்து நள்ளிரவில் இரண்டு மணியளவில் அரங்கநாதன் கோவிலின் கிழக்கு நுழைவு வாயிலில் சேதமடைந்த கோபுரத்தின் இரண்டு நிலைகளிலும் உள்ள பூச்சுகள் இடிந்து விழுந்தது. நள்ளிரவு நேரத்தில் இடிந்து விழுந்ததால், இதில் யாருக்கும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை.

இடிந்து விழுந்த கற்கள் மற்றும் பூச்சுகளை அப்புறப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அதேநேரம், அந்த வழியாக பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.