திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத் திருநாளான கடந்த டிச.3-ம் தேதி தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த ராம.ரவிக்குமார், அரசபாண்டி உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் நிறைவேற்றவில்லை. இதுதொடர்பான நீதிமன்ற அவமதிப்பு மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரத்தில் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், துணை ஆணையர் இனிகோ திவ்யன், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளக் கோரி அரசபாண்டி தரப்பில் நேற்று முன்தினம் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. ‘சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அகில இந்திய பணி விதிகள் (நடத்தை) 1968-ன் அடிப்படையில் துறைரீதியான மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறைச் செயலருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான அனைத்து மனுக்களும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.
ஆட்சியர் பிரவீன் குமார், காவல் ஆணையர் லோகநாதன், துணை ஆணையர் இனிகோ திவ்யன், கோயில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் ஆகியோர் ஆஜராகினர். அவர்களது தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘நீதிமன்ற உத்தரவை மீற வேண்டும் என்ற எண்ணத்தில் எதையும் செய்யவில்லை. சூழலைக் கருத்தில் கொண்டே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தவறு என்றால், நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்.நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்க வேண்டும்’ என்று கூறப்பட்டது.
மற்ற அதிகாரிகள் தரப்பிலும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த வாதம்:
நீதிபதி: ‘‘திருப்பரங்குன்றம் மலை மேல் யாரையும் அனுமதிக்க முடியாது. அதனால் வரும் பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’’ என்று காவல் துறை தரப்பில் பேசியதாக கூறப்படுகிறதே? அப்படி சொன்னது யார்?
அரசுத் தரப்பு: எந்த அலுவலரும் அது போன்ற வார்த்தைகளை சொல்லத் துணியமாட்டார். ஒருவேளை, அவ்வாறு கூறியிருந்தால், வெளிப்படையாக மன்னிப்பு கோரட்டும். ஆட்சியர், காவல் ஆணையர், துணை ஆணையர் ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகின்றனர். அதை ஏற்று அவமதிப்பு வழக்கை முடித்துவைக்க வேண்டும். நீதிபதி கோரும் அனைத்து பதில் மனுக்கள், பிரமாணப் பத்திரங்களையும் தாக்கல் செய்ய தயாராக இருக்கிறோம்.
நீதிபதி: மற்றவர்களைக்கூட மன்னிக்கலாம். ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆட்சியர் எப்படி 144 தடை உத்தரவு பிறப்பிக்கலாம்? அவ்வளவு தைரியமா?
அரசுத் தரப்பு: 10 ஆண்டு உழைத்து ஆட்சியராக வந்திருக்கும் இளைஞரின் வாழ்வை கருத்தில் கொள்ள வேண்டும். தவறுகள் நிகழ்ந்திருக்கலாம். ஆனால், நீதிமன்றத்தை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கில் எதையும் செய்யவில்லை. எனவே, ஆட்சியர் தரப்பில் கூடுதலாக பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு வாதம் நடந்தது.
பிறகு, ஆட்சியர் மீதான அவமதிப்பு வழக்கை தனியாகவும், மற்ற அதிகாரிகள் மீதான அவமதிப்பு வழக்கை தனியாகவும் பிரித்து நீதிபதி உத்தரவிட்டார். ‘‘அடுத்த விசாரணைக்கு ஆட்சியர் மட்டும் ஆஜராக வேண்டும்’’ என்று உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 2-க்கு தள்ளிவைத்தார்.





