தி.மு.க.-ம.தி.மு.க. இடையே எந்த மனக்கசப்பும் இல்லை: துரை வைகோ

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ வேட்புமனு தாக்கல் செய்த பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-என்னால் முடிந்தவரை திருச்சி தொகுதியில் மக்கள் பணியாற்றுவேன்.

தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் சகோதரர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் ரகுபதி மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் ஒத்துழைப்புடன், வாழ்த்துகளுடன் எனது தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளேன்.நேற்று முன்தினம் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நடந்த சம்பவம் தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. தொண்டர்கள் இடையே மனக்கசப்பை ஏற்படுத்தியதாக சொல்கிறீர்கள். அப்படி எந்த மனக்கசப்பும் ஏற்படவில்லை.

அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நான் அப்படி பேசியது உணர்வுகள், உணர்ச்சிகளின் வெளிப்பாடு. மனிதர்களிடம் இது இயல்பானது.இங்கு என்னுடன் வந்திருக்கும் தி.மு.க. நிர்வாகிகளை பார்த்தாலே உங்களுக்கு அது தெரியும். எங்களுக்குள் எந்த மனக்கசப்பும் இல்லை. இந்த சம்பவம் தொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுடன் நான் பேசவில்லை.மனு தாக்கல் செய்ய வருவதற்கு முன்னர் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.அப்போது வாசல் வரை வந்து என்னை வழி அனுப்பினார்.என்னை அவர் தனது மகனாக பாவித்து வெற்றி பெற்று நல்லபடியாக வரவேண்டும் என வாழ்த்தினார்.தேர்தல் கமிஷன் பா.ஜனதா அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் எங்கள் கட்சிக்கு (ம.தி.மு.க.) முறையான சின்னம் ஒதுக்கப்படவில்லை.இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பம்பரம் தவிர்த்து வேறு சின்னங்களும் கொடுத்துள்ளோம். நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார் .