திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாத ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என ராம.ரவிக்குமார், அரச பாண்டி ஆகியோர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில், மறுநாள் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் மனுதாரர்கள் தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.
அதன்படி தீபம் ஏற்றச் சென்ற மனுதாரர்கள், திருப்பரங்குன்றத்தில் 144 தடையாணை அமலில் இருப்பதாகக் கூறி திருப்பி அனுப்பப்பட்டனர். பின்னர் 144 தடையாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகும் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தொடர் நீதிமன்ற அவமதிப்பு புரிந்ததாகக் கூறி மதுரை ஆட்சியர் பிரவீன்குமார், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் யக்ன நாராயணன், துணை காவல் ஆணையர் இனிகோ திவ்யன், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளக் கோரி மனுதாரர்களில் ஒருவரான அரச பாண்டி தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், “நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் அவமதிப்பு செய்ததற்காக, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது அகில இந்தியப்பணி விதிகள் (நடத்தை) 1968-ல் அடிப்படையில் துறை ரீதியான மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறைச் செயலருக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.





