தேனி தொகுதியை 28 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றிய திமுக

தேனி மக்களவைத் தொகுதி ஆரம்பத்தில் பெரியகுளம் மக்களவைத்தொகுதியாக இருந்தது. 1996-ல்நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் ஞானகுருசாமி வெற்றி பெற்றார். 2008-ல் தொகுதி சீரமைக்கப்பட்டு தேனி தொகுதி உருவானது.

பல்வேறு தேர்தல்களிலும் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதியை ஒதுக்கீடு செய்ததாலும், நேரடியாக களமிறங்கி தோல்வி அடைந்ததாலும் பல ஆண்டுகளாக இந்ததொகுதி திமுகவுக்கு வெற்றிகிடைக்கவில்லை.இந்நிலையில், தற்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில்தங்கதமிழ்ச்செல்வன் போட்டியிட்டு, வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் 28 ஆண்டுகளுக்குப் பிறகுஇந்த தொகுதி திமுக வசமாகிஉள்ளது.மேலும், தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு தேனி தொகுதியில் வெற்றி பெற்ற முதல் திமுக வேட்பாளர் என்ற பெருமையை தங்கதமிழ்ச்செல்வன் பெற்றுள்ளார். இவர் 2019 மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2021-ல் போடி தொகுதியில் திமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்விஅடைந்தார்.

அடுத்தடுத்த தோல்விகளால் வருத்தத்ததில் இருந்த அவரது ஆதரவாளர்களுக்கு, இந்த வெற்றிமகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்தபோது, அமமுகவில் டிடிவி.தினகரனுக்கு பக்கபலமாக தங்கதமிழ்ச்செல்வன் இருந்துவந்தார். அரசியல் மாற்றத்தால் இருவரும் இந்த தேர்தலில் எதிரெதிர் அணியில் களமிறங்கும் நிலை ஏற்பட்டது. டிடிவி.தினகரனையும் தோற்கடித்து, தங்கதமிழ்ச்செல்வன் வெற்றி வாகை சூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.