தேனி மாவட்டத்தில் பழமையான பகுதிகளில் ஒன்றாக வருசநாடு பகுதி உள்ளது. இப்பகுதியில் கற்காலம் முதல் தற்காலம் வரை மக்கள் தொடர்ந்து வசித்து வந்திருப்பதற்கான தொல் எச்சங்கள் பரவலாக காணப்படுகின்றன. குறிப்பாக புதிய கற்காலம், பெருங்கற்காலம் ஆகிய காலகட்டங்களில் மக்கள் அடர்த்தியாக இப்பகுதியில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக இங்கு காணப்படும் பாறை ஓவியங்களும், நெடுங்கற்கள், கல்வட்டம், கற்பதுக்கை, முதுமக்கள் தாழி போன்றவை உள்ளன.
பெருங்கற்கால நினைவுச் சின்னங்களின் ஒன்றாக கற்பதுகையுடனான குத்துக்கல் அமைப்பு தமிழ் நாட்டிலேயே வேறு எங்கும் இல்லாத அளவு இப்பகுதியில் வெம்பூர் கிராமத்திற்கு அருகே கல்லாதிபுரத்தில் உள்ளது. 50-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் பலநூறு நெடுங்கல் தூண்கள் இருந்தன. அவை அனைத்தும் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், தகர்த்து அப்புறப்படுத்தப்பட்டு, விளைநிலமாக மாற்றப்பட்டிருக்கிறது.
இது மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்த பெருங்கற்கால, புதிய கற்கால நினைவு சின்னங்களை நாள்தோறும் சிதைத்தும் அழித்தும் வருகின்றனர். வருசநாட்டின் பெருமையை மட்டுமின்றி, தமிழகத்தின் பெருமையை பறைசாற்றக்கூடிய தொல் நினைவுச் சின்னங்களை, தொல்லியல் துறை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் இப்பகுதியை ஆவணம் செய்து அகழாய்வு செய்திட வேண்டும் என்பதும் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் செல்வம் என்பவர் கூறுகையில், வருசநாடு அருகே உள்ள வெம்பூர் பகுதியில் உள்ள நடுகல் தமிழகத்திலேயே மிக உயரமான கல்லாகும். சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து இந்த கல் உள்ளது. இது ஆவண படுத்தப்பட்டதற்கான சான்றும் உள்ளது.