புதிதாக கூட்டணிக்கு வந்த தேமுதிக-வுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கிவிட்டு தங்களுக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட தொகுதிகளை திமுக குறைத்து வழங்குவதை ஏற்க மறுத்து வந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது தங்கள் நிலையிலிருந்து சற்றே இறங்கி வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 இடங்களை ஒதுக்கியது திமுக. அதில் தலா 2 இடங்களில் மட்டுமே அவை வெற்றி பெற்றன. இருப்பினும், 2024 மக்களவை தேர்தலில் ஒதுக்கப்பட்ட தலா இரண்டு இடங்களிலும் வெற்றிபெற்ற கணக்கை வைத்து இம்முறை தங்களுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரி வந்தன. இதற்காக, தலா 15 தொகுதிகள் அடங்கிய விருப்பப் பட்டியலையும் அவை திமுக-விடம் சமர்ப்பித்திருந்தன.
இந்நிலையில், தேமுதிக உள்ளிட்ட புதிதாக கூட்டணிக்கு வந்திருக்கும் கட்சிகளுக்கும் இடங்களை ஒதுக்க வேண்டி இருப்பதால் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக தலா 4 அல்லது 5 இடங்களை மட்டுமே ஒதுக்க முன்வந்தது. இதனால் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கும், திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுக்கும் இடையே மூன்று கட்டமாக பேச்சுவார்த்தை நடந்தும் இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை.
இருப்பினும் திமுக கூட்டணியில் இருந்து விலக விரும்பாத கம்யூனிஸ்ட் கட்சிகள், தற்போது தங்களது நிலைப்பாட்டில் இருந்து ஒரு படி கீழே இறங்கி வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் என்பதற்குப் பதிலாக கடந்த முறை ஒதுக்கியது போல் 6 இடங்களையாவது தங்களுக்கு ஒதுக்க வேண்டும், அதுவும் தங்களின் விருப்பப்பட்டியலில் உள்ள தொகுதிகளாக இருக்கவேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
ஆனால், தலா 5 இடங்களுக்கு மேல் வழங்க திமுக தலைமை முன்வருமா என்று தெரியவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெறவுள்ள அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான தொகுதிகள் எண்ணிக்கை இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



