நடுக்கடலில் தத்தளித்த நாகப்பட்டினம் மீனவர்கள் 36 பேர் மீட்பு

மோசமான வானிலை காரணமாக, சென்னை அருகே நடுக்கடலில் 2 நாட்களாக தத்தளித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 36 பேரை, இந்திய கடற்படையினர் மீட்டனர்.

சென்னையை ஒட்டியுள்ள வங்காள விரிகுடா கடல் எல்லை பகுதியில் கடத்தல்களை தடுத்தல், தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணித்தல், உள்நாட்டு மீனவர்களுக்கு பாதுகாப்பு அளித்தல், சர்வதேச எல்லைக் கோட்டை தாண்டி மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை தடுத்தல் ஆகிய பணிகளை இந்திய கடற்படையும், கடலோர காவல் படையும் மேற்கொண்டு வருகின்றன. இதற்காக, ஏராளமான ரோந்துக் கப்பல்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மோசமான வானிலை: கடந்த 27-ம் தேதி இந்திய கடற்படைக் கப்பல் கான்ஜர், வங்காள விரிகுடாவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, தமிழக கடற்கரையில் இருந்து சுமார் 130 நாட்டிக்கல் மைல் தொலைவில், கடலில் 3 இந்திய மீன்பிடி படகுகள் மோசமான வானிலை காரணமாக கடலில் தத்தளிப்பதை கடற்படையினர் கண்டனர். உடனடியாக, அருகில் சென்று படகில் இருந்த மீனவர்களை மீட்டனர்.

கடலில் தத்தளித்தவர்கள் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் என தெரியவந்தது. சபரிநாதன், கலைவாணி, வி.சாமி ஆகிய விசைப் படகுகள் மூலம் 36 மீனவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வங்கக் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது, மோசமான வானிலை மாற்றம் காரணமாக அவர்களால் கரை திரும்ப முடியவில்லை. மேலும், அவர்களது படகில் இன்ஜின் கோளாறும் ஏற்பட்டதால் நடுக்கடலிலேயே தவிக்கும் நிலை ஏற்பட்டது.

மீனவர்கள் அனைவரும் சென்னை துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து, கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறும்போது, ‘‘மீனவர்கள் 3 மீன்பிடி கப்பல்களில் இருந்தனர். மோசமான வானிலை மற்றும் இன்ஜின் பழுது ஆகிய காரணங்களால் நடுக்கடலில் 2 நாட்களுக்கும் மேலாக தவித்தனர். மீனவர்கள் 36 பேரும் 2 நாட்களாக கடலில் உணவு, தண்ணீர் கிடைக்காமல் தவித்தனர். அவர்களை இந்தியக் கடற்படை பத்திரமாக மீட்டது. அவர்களுக்கு போதிய உணவு, தண்ணீர் வழங்கப்பட்டது’’ என்றார்.