வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் இயங்கிவரும் நில அளவை, மற்றும் நிலவரித் திட்டத் துறையால் இணையவழி ஆவணங்களான ‘அ’ – பதிவேடு, சிட்டா மற்றும் புலப்படம் ஆகியவை இணையவழி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்களின் விவரங்களை ஒருங்கிணைத்து, நில உரிமைதாரர்களுக்கு ‘ஒருங்கிணைந்த நில ஆவணம்’ (Integrated Land Record) என்ற சேவையையும், இணையவழியில் ஒரு புல எண்ணில் நடைபெறும் பட்டா மாறுதல் விவரங்களை பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ‘பட்டா மாறுதல் விவரங்களின் அறிக்கை’ (History of Patta Transfer) என்ற சேவையையும் வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில், துறை செயலர் பெ.அமுதா, நில நிர்வாக ஆணையர் கஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த புதிய சேவை மூலம், நில உரிமைதாரர்கள் தங்களது நிலம் சார்ந்த விவரங்களை உள்ளீடு செய்து https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளத்தில் ‘ஒருங்கிணைந்த நில ஆவணத்தை பார்வையிட்டு பதிவிறக்கம் செய்யலாம்.
பட்டா மாறுதல் விவர அறிக்கையை பொருத்தவரை, நில உரிமையாளர்கள் https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளத்தில் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற தலைப்பை தேர்வு செய்து, தங்கள் நிலம் சார்ந்த விவரங்கள் மற்றும் விவரம் தேவைப்படும் தேதியினை தேர்வு செய்ய வேண்டும்.
பின்னர், பட்டா மாற்ற விவரக்கட்டணமாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.50 வீதம் மற்றும் செயலாக்க கட்டணமாக ரூ.60 ஆகியவற்றை இணையம் வாயிலாக செலுத்தி விண்ணப்பித்து, ‘முந்தைய பட்டா மாறுதல் விவர அறிக்கை’ யை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



