ரூ.2000 கரோனா நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொண்டு புன்னகை செய்த புகைப்படம் வைரலானதால் பிரபலமடைந்த வேலம்மாள் பாட்டி காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். கொரோனா பேரிடர் கால நிவாரணமாகக் கழக அரசு வழங்கிய நிவாரணத் தொகையைப் பெற்ற போது, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்த அவரது புன்னகை வழியாக அவர் என்றும் நம்மிடையே நிலைத்திருப்பார். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு, திமுக ஆட்சி அமைந்தவுடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 மற்றும் மளிகைப் பொருட்கள் கரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. அப்போது, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த கீழகலுங்கடி பகுதியைச் சேர்ந்த 90 வயது மூதாட்டியை கன்னியாகுமரியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்ததாகத் தெரிகிறது. இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதன்மூலம் வேலம்மாள் பாட்டியும் பிரபலமானார்.
அந்தச் சம்பவத்துக்கு பின்னர் முதல்வர் ஸ்டாலின் நாகர்கோவில் வந்திருந்தபோது அவரிடம் தனக்கு ஒரு வீடு ஒதுக்குமாறு மூதாட்டி வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்ற முதல்வர் அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான குடியிருப்பில் வேலம்மாள் பாட்டிக்கு வீடு ஒதுக்கீடு செய்தார். அது அவரிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.