‘நீட் தேர்வுக்கு எதிரான இருசக்கர வாகனப் பேரணியை முடக்குவது ஏன்? ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்?’ என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் இருசக்கர வாகன பிரச்சாரப் பயணம் மேற்கொள்வதாக திராவிடர் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை அனுமதி அளிக்காததால் அது தடைபட்டது.
இதையடுத்து காவல் துறை அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து, இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி அளிக்க தமிழக காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “வாகனப் பேரணிக்கு அனுமதி கோரி அளித்த மனுக்கள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலைக் காரணம்காட்டி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், “இந்த அரசு போராட்டங்களுக்கு எதிரானது அல்ல. இதுபோன்ற போராட்டங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது. பேரணி தொடங்க அனுமதி கோரியுள்ள இடங்கள் அனைத்துமே நெரிசல் மிகுந்த பகுதிகள். எண்ணிக்கை அதிகமாகி விட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். இதனால் அனுமதி மறுக்கப்பட்டது” என விளக்கமளித்தார்.
இதையடுத்து, “பேச்சுரிமை, கருத்துரிமை போல், போராடுவதும் மக்களின் அடிப்படை உரிமை. நீட் தேர்வுக்கு எதிரான இருசக்கர வாகனப் பேரணியை முடக்குவது ஏன்?” என காவல் துறைக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், “இந்த வாகனப் பேரணிக்கான பெட்ரோல் செலவை அரசு வழங்க போவதில்லை? பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து காரணங்களால் இவ்வாறு அனுமதி மறுத்தால் ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்? குடிமக்களின் அடிப்படை உரிமையை மாநில அரசு நசுக்கக் கூடாது” என சரமாரியாக கேள்விகளை நீதிபதி எழுப்பினார்.
பின்னர், பேரணிக்கு அனுமதி மறுத்தது குறித்து கூடுதல் விளக்கம் அளிக்க காவல் துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை ஏற்று, விசாரணையை ஆக.17-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.





