‘நீட்’ ரத்து செய்யப்பட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

மருத்துவ கல்வியை வணிகமயமாக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான கலந்தாய்வு அடுத்த வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வி என்பது ஏழைகளுக்கானது அல்ல என்பதை தரவரிசை சார்ந்த புள்ளிவிவரங்கள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன.

மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்பதற்காக தகுதி பெற்றுள்ள 28,849 பேரில் வெறும் 31 சதவீதத்தினர், அதாவது 9,056 பேர் மட்டும்தான் முதல் முயற்சியில் நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள். மீதமுள்ள 19,793 (69 சதவீதம்) இரண்டுஅல்லது அதற்கும் கூடுதலான முயற்சியில் வெற்றி பெற்றவர்கள்.

இதேநிலை தொடர்ந்தால், அடுத்த சில ஆண்டுகளில் நீட் தேர்வில் முதல் முயற்சியில் தகுதி பெற்று மருத்துவப் படிப்பில் சேரும்மாணவர்கள் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கும் கீழே குறைந்துவிடும்.

எனவே, சமூகநீதியைக் காப்பதிலும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதிலும் மத்திய அரசுக்கு அக்கறை இருந்தால், நீட் தேர்வுகளை உடனடியாக ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.