நீதிமன்ற உத்தரவின்படி வேல்முருகன் இழப்பீடு வழங்க வேண்டும்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், திமுக கூட்டணி எம்எல்வுமான வேல்முருகன் தனக்கு மாதம் ரூ.25 ஆயிரத்தை தர வேண்டும் என்றும், வளசரவாக்கத்தில் தனது பெயரில் உள்ள வீட்டையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ள காயத்ரி வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏவுமான பண்ருட்டி வேல்முருகனிடம் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் காயத்ரி ஆகியோருக்கு இடையேயான வழக்கு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் எம்எல்ஏ பண்ருட்டி வேல்முருகன், காயத்ரி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு வேறு ஒரு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காயத்ரி செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனை திருமணம் செய்து அவருடன் 20 ஆண்டுகள் வாழ்ந்தேன். என்னுடன் வாழ்ந்ததற்கு உரிய நிவாரணமோ, நியாயமோ எனக்கு அவர் வழங்கவில்லை. எல்லோருக்காகவும் பேசுகிறார். இலங்கைக்கு விடுதலை வாங்கி தருவேன் என்கிறார். இவரிடம் இருந்து எனக்கு விடுதலையும், பாதுகாப்பும் வேண்டும்.

எங்கள் விவாகரத்து வழக்கில் 2018-ம் ஆண்டு தீர்ப்பு கிடைத்தது. மாதம் ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவு உள்ளது. இதுவரை அவர் இழப்பீடு கொடுக்கவில்லை. அதற்காகத்தான் நீதிமன்றம் வந்திருக்கிறேன்.