மணிப்பூர் வன்முறைச் சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரியை பெரம்பலூர் மாவட்டம் குன்னம் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்திரி, மணிப்பூர் வன்முறை சம்பவம் குறித்து ஒரு யூ டியூப் சேனலில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ப.கவியரசு என்பவர் ஜூலை 27-ல் புகார் அளித்திருந்தார்.
அந்த மனுவில், மணிப்பூர் வன்முறைச் சம்பவம் குறித்து பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி என்பவர் ஒரு யூடியூப் சேனலில், இரு தரப்பு மக்களிடையே அமைதியை குலைக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் விதத்திலும் பேசியுள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை ஏளனமாகவும், அவமதிக்கும் வகையிலும், அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசியிருந்தார். எனவே, அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.