பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுகிறதா?

காஞ்சி மாவட்டம் பரந்தூரில் அமையவிருந்த சென்னைக்கான 2-வது சர்வதேச விமான நிலையத் திட்டப் பணிகள், தவெக ஆட்சிப் பொறுப்பேற்றதை தொடர்ந்து, நிலப் பத்திரப் பதிவு உள்ளிட்ட பூர்வாங்க பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பரந்தூர் விமான நிலையம் வருவதற்கான சாத்தியக் கூறுகள் பெருமளவு குறைந்துள்ள நிலையில், ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் சிப்காட் தொழிற் பூங்கா அமைப்பது குறித்து பரிசீலிக்கும்படி அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பரந்தூர் பகுதியில் விமான நிலையம் வரும் என்று நம்பி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்தன. பலர் நிலத்தை வாங்கி குவித்ததால் கடந்த ஓரிரு ஆண்டுகளில் நிலங்களின் மதிப்பு 10 மடங்கு உயர்ந்த நிலையில், தற்போது இந்த ரியல் எஸ்டேட் வணிகம் கடும் சரிவைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது.

முந்தைய ஆட்சியின் போது, பரந்தூர் பசுமை வழி விமான நிலையத் திட்டத்துக்காக 5,746 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டது. அதில் முதற்கட்டமாக, ஏறத்தாழ 1,700 ஏக்கர் நிலம் நில உரிமையாளர்களின் சம்மதத்துடன் நேரடியாகக் கையகப்படுத்தப்பட்டது.

தற்போது தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்துள்ளது. முன்னதாக, இந்த விமான நிலையத் திட்டத்தை எதிர்த்து முதல்வர் விஜய் போராட்டத்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இத்திட்டம் தற்போது மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட 1,700 ஏக்கர் நிலத்தை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைப் பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால், அந்த நிலப் பரப்பில் புதிய சிப்காட் தொழிற் பூங்காவை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அரசுத் தரப்பில் தீவிர மாகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

விமான நிலையம் வருவதற்கான சாத்தியக் கூறுகள் குறைந்துள்ள நிலையில், ஏகனாபுரம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு நிம்மதிப் பெரு மூச்சு விட்டுள்ளனர். இது குறித்துப் போராட் டக் குழுவினரிடம் கேட்டபோது, “தேர்தல் பிரச்சாரத்தின் போது, பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று தற்போதைய முதல்வர் அறிவித்திருந்தார். தற்போது அவர் தலைமையிலான அரசு பொறுப் பேற்றுள்ளதால், இந்தத் திட்டம் நிச்சயமாக வராது என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது” என்றனர்.