தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தனி நபர்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் சென்றால் அதற்கான ஆவணம் கட்டாயம் இருக்க வேண்டும். இல்லை என்றால் தேர்தல் பறக்கும் படையினர் அதைப் பறிமுதல் செய்வார்கள். தேர்தல் பறக்கும் படையினர் போலீஸாருடன் இணைந்து தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, பெரவள்ளூர், ஜவஹர் நகர், 3-வது வட்டச் சாலையில் காரில் வந்த நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த பரத் அருண் (36), என்பவரிடமிருந்து ஆவணங்களின்றி வைக்கப்பட்டிருந்த ரூ.68,000 பறிமுதல் செய்யப்பட்டது.
ராயபுரம்: அதே பகுதியில் காரில் வந்த பெரவள்ளூரைச் சேர்ந்த லோகேஷ் (41) என்பவரிடமிருந்து ரூ.94 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ராயபுரம் எஸ்.என் செட்டி தெரு வழியாக காரில் வந்த பாலவாக்கத்தைச் சேர்ந்த அருணகிரி (59) என்பவரிடமிருந்து ரூ.78 ஆயிரம் பறிமுதலானது. வால்டாக்ஸ் சாலையில் பறக்கும் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டபோது ஆந்திர மாநிலத்திலிருந்து ரயில் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த சஞ்சீவ் (55) என்பவர் ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 79,200 பறிமுதல் செய்யப்பட்டது.
கொளத்தூர்: இதேபோல், கொளத்தூர் தில்லை நகரில் காரில் வந்த மொத்த மீன் வியாபாரி இளமாறனிடமிருந்து ரூ.1 லட்சத்து 3,200 பறிமுதலானது. திருவான்மியூர் தெற்கு அவென்யூ வழியாக காரில் வந்த கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி (46) என்பவரிடமிருந்து ரூ.2.50 லட்சம் பறிமுதலானது.
தரமணியில் எம்ஜிஆர் சாலை ரயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் காரில் சென்ற தி.நகர் கிருஷ்ணசாமியிடமிருந்து ரூ.1.19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.